49.
யோனத்தான்– சவுலின் குமாரன்– நட்புக்கு முன்னுதாரணம்.
முக்கிய வசனம்:
"என் சகோதரனாகிய யோனத்தானே, உனக்காக நான் வியாகுலப்படுகிறேன்; நீ எனக்கு இன்பமாயிருந்தாய்; உன் சினேகம் ஆச்சரியமாயிருந்தது; ஸ்திரீகளின் சினேகத்தைப்பார்க்கிலும் அதிகமாயிருந்தது". (2 சாமுவேல் 1:26)
சுருக்கமான கதை:
·
சவுல்
ராஜாவின் மூத்த குமாரன்.
·
ஒரு
போர் வீரனுக்குரிய திறமையும், தைரியமும் உடையவன்.
·
தாவீது
ராஜாவின் மேல் மிகுந்த ராஜபக்தி உடையவன்.
·
யோனத்தானும், தாவீதும்
ஒரு சிறந்த நட்புக்கு முன் மாதிரியாக விளங்கினர்.
·
தன்
உரிமைகளையும், சலுகைகளையும் தியாகம் செய்ததன் மூலம், யோனத்தான் தாவீதிடம் தன் பெருந்தன்மையைக் காட்டினான்.
1. தாவீதுக்கும் யோனத்தானுக்குமிடையே இருந்த நட்பு:
முன்னுரை: யோனத்தானின் கதை.
யோனத்தான் என்ற பெயருக்கு "ஆண்டவர் கொடுத்தார்" என்று பொருள்; பழைய ஏற்பாட்டின் பலருக்கு இந்த பெயர் இருந்தது. ஆனால்
நாம் இங்கு பார்க்கப்போவது யோனத்தான், சவுலின் மூத்த குமாரன் (2 சாமுவேல் 19:17). சவுலுக்குப் பின் இஸ்ரவேலின் ராஜாவாகிய தாவீதின் மிக நெருங்கிய நண்பன். அவனுடைய தனிப்பட்ட வீரத்தைப் பற்றி 1 சாமுவேல் 14 இல் காணலாம். யோனத்தானுக்கு தாவீதின்மேல் இருந்த பற்று தாவீது கோலியாத்தை வீழ்த்தியபோது தொடங்கியது (1 சாமுவேல் 18:1–4). அந்த நட்பு, சவுலுக்கு தாவீதின்மேல் இருந்த பகைமையால் பாதிக்கப்படவில்லை (1 சாமுவேல் 19:1–7). தந்தைக்கும், மகனுக்கும் இடையே, ஒரு காலத்தில் மிகவும் நெருக்கமாக இருந்த உறவு, சவுலுக்கு தாவீதின்மேல் இருந்த பகை மனப்பான்மையால், முறியும் நிலைமைக்கு வந்தது (1 சாமுவேல் 20:2, 20:34). ஆனாலும் நண்பர்கள் பிரிந்தார்கள் (1 சாமுவேல் 20:42). யோனத்தான், தாவீதின் எதிர் காலத்தை அறிந்திருந்தாலும் (1 சாமுவேல் 23:17), தன் தந்தையின் நோக்கத்தையே சார்ந்து இருந்து, கில்போவாவிலும் அவனுடனே இருந்தான் (1 சாமுவேல் 31:1–2; 2 சாமுவேல் 1:5). சவுலின் மேலும், அதைவிட முக்கியமாக யோனத்தானின் மேலும் தாவீதின் புலம்பல்தான், வேதாகமத்திலேயே மிகவும் பரிதாபத்திற்குரிய பகுதியாகும் (2 சாமுவேல்1:17–27). தாவீதுக்கு யோனத்தானின்மேல் இருந்த அன்பு, அவனுடைய குமாரனாகிய மேவிபோசேத்தை தாவீது நடத்திய விதத்தில் தெளிவாகிறது (2 சாமுவேல் 4:4; 9:6–13).
யோனத்தானின் குடும்பம்:
யோனத்தானுக்கு மேவிபோசேத் என்ற ஒரு குமாரன் இருந்தான். யோனத்தானுக்கும் தாவீதுக்கும் இடையே இருந்த ஒரு சகோதர ஒப்பந்தம், முடவனாகிய மேவிசேபோத்துக்கு, சவுலின் நிலங்களையும், அரச நீதிமன்றத்தின் உறுப்பினர் நிலையையும் பெற்றுக் கொடுத்தது. இந்த உறுப்பினர் நிலை, கடைசியில் சவுலின் மற்ற குமாரருக்கேற்பட்ட மரணத்திலிருந்து அவனைக் காப்பாற்றியது. அவனுடைய தாயின் பெயர் அஹினோம்; அவள் அஹிமாசின் குமாரத்தி. ஒரு சமயம், சவுல் யோனத்தான்மேல் கோபமாக இருந்தபோது, அவனைப் பார்த்து,"இரண்டகமும் மாறுபாடுமுள்ளவளின் மகனே", என்று குறிப்பிட்டான் (1சாமுவேல்20:30).
அவனுடைய குணம்:
கழுகைப்போல் வேகமும், சிங்கத்தைப்போல் பலமும் கொண்ட சவுல் அரசின் ராஜகுமாரனாகிய யோனத்தான் பின்வாங்காத வீரமுள்ளவனாய் இருந்தான். அந்த வீரத்தின் மூலம் அவனைப் பின்பற்றிய பலருக்கு உத்வேகம் கொடுப்பவனாய் இருந்தான். எவ்வளவோ துன்பங்களுக்கும், இன்னல்களுக்கும் இடையே அவன் தாவீதின்மேல் தனக்கிருந்த நட்பை எப்பொழுதும் உறுதிப்படுத்தி வந்தான். சவுலின் முன்கோபமும், நியாயமில்லாத பகையும் அவன் மகனுடைய மென்மையான குணத்துக்கும் ஆராய்ந்து அறியும் தன்மைக்கும் எதிர் மறையாக இருந்த போதிலும், யோனத்தான் தன் தந்தையோடு வாழ்விலும், சாவிலும் ஒன்றாக சேர்ந்து இருந்தான் (2 சாமுவேல்1:23).
2. யோனத்தானின் பலங்களும், சாதனைகளும்:
அ) நட்புக்கு
முன் மாதிரி: யோனத்தான் விசுவாசமான நட்புக்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டாக இருந்தான். சில
நேரங்களில் தன் தந்தைக்கும், தன் நண்பனான தாவீதுக்குமிடையே எதிர்மறையான விசுவாசத்தில் சிக்கி இருந்தான். யோனத்தானுக்கு எப்பொழுதும் உண்மையே அவனுடைய பற்றுதலை வழி நடத்தியது. தாவீது அவனது நண்பன் ஆனதால் அவனுக்கு விசுவாசமாய் இருந்தான். ஆண்டவர்மேல் அவனுக்கு இருந்த விசுவாசம் அவனை முரண்பாடான மனித உறவுகளைக் கையாள நடத்தியது.
ஆ) யோனத்தான்
வீரமும், விசுவாசமும் உள்ள தலைவனாயிருந்தான். தாவீதின்மேல் அவனுக்கிருந்த மிகவும் ஆழமான, உண்மையான நட்பு, பிற்கால சந்ததியார் அவனை வியந்து பாராட்டச் செய்தது.
இ) அவன்,
தான் நேசித்தவர்களுடைய நன்மைக்கு முன்னால் தன்னுடைய நலத்தைப் பற்றி எண்ணியதில்லை.
ஈ) மிக்மாஷில்
அவனுடைய வெற்றியும், கில்போவாவில் அவனுடைய மரணமும்: கில்போவாவில், பெலிஸ்தியருக்கு எதிரான போரில் யோனத்தான் கொல்லப்பட்டான். அங்கே அவனுடைய தந்தையான சவுலும், சகோதரர்களாகிய அபினதாபும், மல்கிசுவாவும் கொல்லப்பட்டார்கள். சில வருடங்களுக்குப்பின் சவுலின் எலும்புகளையும், அவன் குமாரனாகிய யோனத்தானின் எலும்புகளையும், பென்யமீன் தேசத்துச் சேலா ஊரிலிருக்கிற கீசின் கல்லறையிலே தாவீது அடக்கம் பண்ணினான் (2 சாமுவேல் 21:13–14).
உ) அவன்
ஆண்டவரையே சார்ந்து இருந்தான். ஆண்டவரோடு யோனத்தானுக்கு இருந்த நெருங்கிய உறவே, வாழ்க்கையின் மிகவும் குழப்பமான காரியங்களைச் சமாளிக்க அவனுக்கு உதவியது.
3. அவனுடைய வாழ்க்கையிலிருந்து நாம் கற்கும் பாடம் என்ன?
அ) நம்பிக்கையும், விசுவாசமுமே வீரத்தின் முக்கியமான பகுதியாகும்.
ஆ) ஆண்டவரைச் சார்ந்து இருந்தால்தான் நாம் மற்ற மனித உறவுகளைப் பற்றி ஆராய்ந்து முடிவு எடுக்க முடியும்.
இ) இயேசு
கிறிஸ்துவாலும்,
யோனத்தானாலும் காட்டப்பட்டுள்ள சிறந்த நட்பு மிகவும் விலையேறப்பெற்றது. உண்மையான நண்பர்கள் எப்பொழுதும் தம்மைப்பற்றி எண்ணாமல், மற்றவர்களைப்பற்றியே எண்ணுவார்கள்.
4. வேத ஆதாரங்கள்:
யோனத்தானுடைய கதை 1 சாமுவேல் 13–31 அதிகாரங்களில் கூறப்பட்டுள்ளது. 2 சாமுவேல் 9 லும் கூறப்பட்டுள்ளது.
5. விவாதத்துக்குரிய கேள்விகள்:
5.1. யோனத்தான்
தாவீதின் மேல் இருந்த பற்றை எவ்வாறு காட்டினான்?
5.2. அவனுடைய
தந்தையும், குமாரனும் யார்?
5.3. சவுல்
ஏன் யோனத்தான்மேல் கோபமாக இருந்தான்?
5.4. அவனுடைய
வாழ்க்கையிலிருந்து
நாம் கற்கும் பாடங்கள் என்ன?
5.5. நற்செய்திப்
பணியின்மேல் நாம் எவ்வாறு நட்பை வளர்க்கலாம்?
மொழி பெயர்ப்பு:
திருமதி.கிரேஸ் ஜட்சன்,
பரி.பவுல் ஆலயம், பெட்டாலிங் ஜெயா.