Bishop Datuk Dr. S.Batumalai Ph.D

Bishop Datuk Dr. S.Batumalai Ph.D
பேராயர் டத்தோ டாக்டர் எஸ்.பத்துமலை

மேற்கு மலேசிய ஆங்கிலிக்கன் திருச்சபையின் உதவிப் பேராயர் டாக்டர் எஸ்.பத்துமலை

பேராயர் டாக்டர் எஸ்.பத்துமலை நடத்துகிற நீள்விரி இறையியல் கல்விக்கான பாடப் பொருள்களை நான் மொழி பெயர்த்து வருகிறேன். இப்பாடப் பொருள்கள் உலகமெங்கும் வியாபித்துக் கிடக்கிற தமிழ்க் கிறிஸ்த்வர்கள் பயனுள்ளவையாக அமையவேண்டும் என்பதற்காக இந்த வலைமனையில் இவற்றைப் பதிப்பிக்கிறேன்.

Friday, July 29, 2011

115 பெத்சாயிதா ஊரானாகிய பிலிப்பு



 கிறிஸ்துவின் அப்போஸ்தலர்களில் ஒருவன்

முக்கிய வசனம்:
43. மறுநாளிலே இயேசு கலிலேயாவுக்குப்போக மனதாயிருந்து, பிலிப்புவைக் கண்;டு: நீ எனக்குப் பின்சென்று வா என்றார். 44. பிலிப்பென்பவன் அந்திரேயா பேதுரு என்பவர்களுடைய ஊராகிய பெத்சாயிதா பட்டணத்தான். 45.பிலிப்பு நாத்தான்வேலைக் கண்டு: நியாயப்பிரமாணத்திலே மோசேயும் தீர்க்கதரிசிகளும் எழுதியிருக்கிறவரைக் கண்டோம்;;@ அவர் யோசேப்பின் குமாரனும் நாசரேத்தூரானுமாகிய இயேசுவே என்றான்.   யோவான் 1:43-45

சுருக்கத் திரட்டு
கிறிஸ்துவிடம் பிறரை அழைத்து வருபவனே நல்ல சீஷன். நாத்தான்வேல் மற்றும் கிரேக்கர்களை கிறிஸ்துவிடம் அழைத்து வந்தவன்.
“எனக்குப் பின்சென்று வா” என்ற கிறிஸ்துவின் வார்த்தையைக் கேட்டு பின்சென்றவன்.  
ஜனங்களின் ஆவிக்குரிய தேவைகளை மட்டுமல்லாது அவர்களின் சரீரத் தேவைகளையும சந்திக்க அறிந்து,  5000 பேருக்கு உணவளிக்க உதவி;யாயிருந்தான்.        
சிறுவன் கையில் இருந்த 5 அப்பம் 2 மீனை அற்பமாக எண்ணாமல் அதனால் 5000 பேரை போஷிக்க உதவினவர்.
இயேசுவைக் காணவேண்டும் என்ற உலகளாவிய ஆன்மீக தாகத்தை கோடிட்டுக் காட்டுகிறார்.

1. முகவுரை - அவன் வரலாறு

பிலிப்பு என்றால் ‘குதிரைகளின் நேசன்’ என்று பொருள். இவர் இயேசுவின் சீடர்களில் ஒருவர். சீமோன், அந்திரேயா என்பவர்களை அழைத்த அதே நாளில் “எனக்குப் பின்சென்று வா” என்ற இயேசுவின் அழைப்பைப் பெற்றவர். நாத்தான் வேலை இயேசுவிடம் அழைத்து வர கருவியாக செயல்; பட்டவர் இந்த பிலிப்பு (யோவான் 1:43-46). இவர் பெத்சாயிதா பட்டணததைச் சேர்ந்தவர் (யோவான் 1:44). இது கலிலேயா நாட்டில் உள்ள  பெத்சாயிதா (யோவான் 12:21). இது அந்திரேயா சீமோன் என்பவர்களின் சொந்த ஊராகும். மேற்குக் கரை ஏரியில் மீன்பிடி கிராமமாக காணப்பட்டது. மத்தேயு 10:3 மாற்கு 3:14 லூக்கா 6:14 ஆகிய சுவிசேஷங்களில் உள்ள அப்போஸ்தலர்கள் பட்டியலில்; ஐந்தாவது  இடத்தில் இவரும், ஆறாவது பற்தொலொமேயும் இடம் பெற்றுள்ளனர். ஆனால் அப்போஸ்தலர் 1;:13ல்; இவர் ஐந்தாவது இடத்திலும் தோமா 6வது இடத்திலும் வருகின்றனர். இவரைக் குறித்த மேலும் சில குறிப்புக்கள் புதிய ஏற்பாட்டில் கீழ்கண்ட இடங்களில் காணமுடிகிறது.  யோவான் 6:5 நமக்கு இவரது அறியாமையையும், யோவான் 12:21 கிரேக்கர்களை இயேசுவிடம் அழைத்து வருவதையும் மற்றும் யோவான் 14:8 “பிதாவை எங்களுக்குக் காண்பியும்” என கேட்பதையும் நாம் பார்;க்கலாம். இயேசு உயிர்தெழுந்த பின் அப்போஸ்தலர்கள் மேல்வீட்டறையிலே கூடியிருந்த போது அங்கேயும் இவர் காணப்பட்டார் (அப்.1:13). அதைத் தொடர்ந்து புதிய ஏற்பாட்டில் இவருடைய பெயர் பின்னர் காணப்படவில்லை.

2  ஆற்றலும் நிறைவேற்றலும்
2-1 “எனக்குப் பின்சென்று வா” என்ற இயேசுவின் எளிய  ஆழமான அழைப்பை ஏற்று  பிலிப்பு பின்சென்றார். இயேசுவின் முதலாவது அழைப்பில் இதுவும் ஒன்று. இந்த அழைப்பு  கிறிஸ்துவைப்  பின்தொடர  விரும்புகிற அனைவருக்கும் உரியது. இது   வாழ்க்கை முழுவதுக்குமான ஓர் அழைப்பு எனலாம்.

2-2  பிலிப்பு கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டதை மறைக்கவில்லை. வேறு ஒரு நண்பனாகிய நாத்தான்வேலைக் கண்டு,   பழைய ஏற்பாட்டிலே   எழுதியிருக்கிற மேசியா, நசரேனாகிய இயேசு தான் என்று தெரிவித்தார். காரணம் இவருக்குப் பழைய    ஏற்பாட்டைக் குறித்த ஞானம் இருந்தது. எனவே இரண்டு ஏற்பாட்டையும் இணைத்து  இயேசுவைக் குறித்து அவருடைய அடையாளத்திலே,  சந்தேகங்கள்,  கேள்விகள் எழும்பும்   போது அவர் “ வந்து பார்”  என்று நாத்தான்வேலிடம் கூறுகின்றார். சுருக்கமாக கிறிஸ்தவின் இந்த சிறிய அழைப்பினால் இவர் கிறிஸ்துவுக்காய் ஒருமிகப்பெரிய  மிஷனரியாக  மாறினார். புதிய ஏற்பாடு கூறுகிறபடி இவர் கண்டு சாட்சி கொடுக்கிறார். இரண்டாவதாக இயேசுவிடம் மேலும் கேள்விகள் கேட்கப்பட்ட போது அவரும் “வந்து பார்” என அழைப்பு விடுக்கிறார்;. ஒவ்வொரு மனிதனும் கிறிஸ்துவை அனுபவித்துத் தெரிந்து கொள்ள வேண்டும்.
   
2-3  இயேசு 5000  பேருக்கு உணவளித்த சம்பவத்தில் பிலிப்பு சில  சந்தேகங்களை  எழுப்புகிறார் “இவர்களில் ஒவ்வொருவனும் கொஞ்சங்   கொஞ்சம்   எடுத்துக்கொண்டாலும்,  இருநூறு பணத்துக்கு அப்பங்களும்    இவர்களுக்குப்  போதாதே” (யோவான் 6:7) என்கிறான்.  இயேசு  தாமே இந்த 5000 பேருக்கும்  உணவு வழங்கி அற்புதம் செய்ய போகிறார் என்பதை அறியாதபடியினால் இப்படி  கேட்கிறார் (யோவான் 6:6)

2-4  இவர் சில கிரேக்கர்களை இயேசுவிடம் அழைத்து வந்தார் (யோவான் 12:20)
    கிரேக்கர்கள் இவரை அணுகிய முறையிலிருந்து இவருக்கு கிரேக்கர்களிடையே  செல்வாக்கு அல்லது தொடர்பு இருந்ததை அறிய முடிகிறது.   மற்ற   கலாச்சாரத்தினரிடமும் அணுகுகிறவராக இவர் காணப்பட்டார். இது ஒரு விசேஷ தனிப்பட்ட வரமாகும். பிலிப்புவிடம் கேட்கப்பட்ட சிறந்த கோரிக்கை என்னவென்றால்  “ஐயா நாங்கள்  இயேசுவை  காணவேண்டும்” என்பதே. இவர்  போதுமான அளவு தன்னைத் தாழ்த்தி   அந்திரேயா  விடம்  உதவி  கேட்கிறான். பின்னர் அந்திரேயாஇவர்களை  இயேசுவிடம்  அழைத்துச்  செல்கிறான் (யோவான் 12:22).   இவர்கள் இருவருக்கும் இருந்த மத பிரச்சாரத்தின் ஆவி மிகவும் பாராட்டத்தக்கது.

2-5 “பிதாவை எங்களுக்குக் காண்பியும், அது எங்களுக்குப் போதும்”  (யோவான்14:8) என்ற இவருடைய ஆர்வமும் தேடலும் நமக்கு இயேசுவின் பதிலான “நான்   பிதாவிலும் பிதா என்னிலும் இருக்கிறதை நீ விசுவாசிக்கிறதில்லையா?”   (யோவான்14:10) என்ற உண்மையை அறிந்து கொள்ள பேருதவியாக இருக்கிறது.

3.  வேதாகமக் குறிப்பு
    இவரைக் குறித்து பரி.மத்தேயு, பரி.மாற்கு, பரி.யோவான் ஆகிய சுவிசேஷங்களில் காணலாம்.

4.     சிந்தனைக்குரிய கேள்விகள்
   4-1  இவருடைய சொந்த ஊர் எது?
   4-2   பிலிப்பு யாரைக் கண்டார்?
    4-3 5000 பேரை போஷித்த கதையில் இவருக்கு எழுந்த சந்தேகங்கள் என்ன?
    4-4 மிஷனரி ஆக இருந்து இவர் ஆற்றிய பங்கு என்ன?
    4-5 இயேசுவிடம் இவர் கேட்ட கேள்வி என்ன?  


மொழிபெயர்ப்பு:
சகோ.ஜான் ஆரோக்கிய சாமி
கிள்ளான்
             

Monday, July 25, 2011

21. எலியா தீர்க்கதரிசி


21. எலியா தீர்க்கதரிசி

கருவசனம்:
அந்திப்பலி செலுத்தும் நேரத்திலே, தீர்க்கதரிசியாகிய எலியா வந்து: ஆபிரகாமுக்கும் ஈசாக்குக்கும் யாக்கோபுக்கும் தேவனாகிய கர்த்தாவே, இஸ்ரவேலிலே நீர் தேவன் என்றும், நான் உம்முடைய ஊழியக்காரன் என்றும், நான் இந்தக் காரியங்களையெல்லாம் உம்முடைய வார்த்தையின்படி செய்தேன் என்றும் இன்றைக்கு விளங்கப்பண்ணும். கர்த்தாவே, நீர் தேவனாகிய கர்த்தர் என்றும், தேவரீர் தங்கள் இருதயத்தை மறுபடியும் திருப்பினீர் என்றும் இந்த ஜனங்கள் அறியும்படிக்கு, என்னைக் கேட்டருளும், என்னைக் கேட்டருளும் என்றான்.
 அப்பொழுது: கர்த்தரிடத்தில் இருந்து அக்கினி இறங்கி, அந்தச் சர்வாங்க தகனபலியையும், விறகுகளையும், கற்களையும், மண்ணையும் பட்சித்து, வாய்க்காலிலிருந்த தண்ணீரையும் நக்கிப்போட்டது.
1 இராஜாக்கள் 18:36-38

கதைச் சுருக்கம்
1.     எலியா தீர்க்கதரிசி ஆகாப் ராஜாவின் பாவங்களைக் கண்டித்து உணர்த்தினார்.
2.     எலியாவுக்கும் பாகால் கள்ளத் தீர்க்கதரிசிகளுக்கும் ஏற்பட்ட பலப் பரிட்சையின் சம்பவத்தின் மூலம், எலியாவின் கடவுளின் மேலுள்ள விசுவாசம் பெலப்பட்டது.
3.     எலியாவின் தேசம் பஞ்சத்தில் அடிப்பட்ட போது, சறிபாத் என்ற ஊரில் அற்புதங்களை நடப்பித்தான்.
4.     திஸ்பியனாகிய எலியா ஆகாப் மற்றும் அவனின் மனைவி யெசபேலுக்கும் ஊழியக்காரராய் இருந்தார்.
5.     எலியா ஆகாப் மற்றும் யெரொபியாம் காலங்களில் தீர்க்கதரிசியாய் இருந்தாலும் கூட அவரின் முக்கிய பனிகள் ஆகாப் காலங்களில் நிறைவேறியது.

1.0.          முன்னுரை – எலியாவின் சுயசரிதை
“யெகோவாவே தேவன்” என்பது எலியா என்ற பெயரின் பொருள். இஸ்ரவேல் தேசத்திலே மிகவும் நேசிக்கப்பட்டவனும் உன்னதமான தீர்க்கதரிசியும் இவரே. எலியா யோர்தானின் கிழக்கேயுள்ள கிலேயாட் என்ற ஊரிலிருந்து வந்த திஸ்பியன். இஸ்ரவேலின் ராஜாவாகிய ஆகாப், தன் மனைவியாகிய யேசபேலின் பேச்சைக் கேட்டு, தன் தேசத்தை விக்கிர ஆராதனைக்குள் வழி நடத்தி சென்று யெகோவாவின் உடன்படிக்கையை மீறினார். ஆகாப் காலத்தில், இஸ்ரவேல் தேசத்தின் மூன்று ஆண்டுகள் மழை பெய்யாததினால், அத்தேசம் வரண்டு போனது. (1ராஜா.17.1)

எலியா துடிப்பு மிக்க தீர்க்கதரிசியும், உள்ளத்தில் பக்தி வைராக்கியம் நிறைந்து, அக்கினி மயமானவராகவும் , மலைப்பங்கான இடங்களில் வசிக்க விரும்பியவனுமாய் இருந்தான். அவனின் தலை மயிர் நீளமாகவும் அடர்த்தியாகவும் இருந்தது (2ராஜா.1:2). அவன் சரீரம் மெலிந்ததாகவும், அவனின் தசைகள் பலம் வாய்ந்ததாயும் இருந்தது. ஆகாபின் குதிரை பூட்டிய இரதத்தைத் தன் காலால், ஓடியே துரத்திப் பிடித்த சம்பவம், மேற்கூறப்பட்ட பராக்கிரமத்திற்குச் சான்று. எலியாவின் வஸ்திரம் வார்பட்டை மற்றும் சால்வை மிருகங்களின் தேலாலானது (1ராஜா.19:13).

ஆகாப் மற்றும் ஜனங்களின் பாவத்தின் நிமித்தம்  தேசத்தில் மூன்று ஆண்டுகள் பஞ்சம் நிலவியது (1இராஜா.4:25).

எலியா ஆகாபுக்கு எதிராக தீர்க்கதரிசனம்  உரைத்த பின்பு, கேரீத் ஆற்றண்டையில் ஒளிந்து கொண்டிருந்தான். அப்பொழுது, அங்கு ஒரு காகம் அவனுக்குக் காலையிலும் மாலையிலும் அப்பமும் இறைச்சியும் கொண்டு வந்து கொடுத்தது. தாகத்துக்குத் கேரீத் ஆற்றுத் தண்ணீரைப் பருகினான்.

தேசத்தில் கொடிய பஞ்சத்தின் நிமித்தம், யேசபேலின் ஊராகிய சீதோனிலுள்ள சாறிபாத் ஊறுக்கு எலியா சென்றான். அங்கு ஒரு விதவை விறகு பொறுக்கிக் கொண்டிருக்க்க் கண்டான். அவளும் தன் குமாரனும் தங்களுடைய கடைசி ஆகாரத்தைச் சமைத்து உண்ணும்படி விறகு பொறுக்கிக் கொண்டிருந்தாள். எலியா அந்த ஆகாரத்தைத் தனக்கு வேண்டும் என்று கேட்டபொழுது, அவள் அதை மறுக்காமல் கொடுத்து விட்டாள். அவளின் விசுவாசம் அவளுக்கு அந்த மூன்று ஆண்டுகால பஞ்சத்தில், தாறும் தன் மகனும் காக்கப்படும் படிக்கு எண்ணெயும் மறும் குறைவு படாமலிருந்த்து (1இராஜா.17:10). இதே சாறிபாத் ஊரில்தான் எலியா அந்த விதவையின் நோய்வாய்பட்டு மரித்த மகனை உயிரோடே எழுப்பினான். (1இராஜா.17:17).

கர்த்தர் எலியாவை ஏவினார். அவர் ஆகாப்பைக் காணச் சென்றார். செல்லும் வழியில் ஒபதியாவைக் கண்டார். கர்த்தர் எலியாவைக் கொண்டு, ஆகாபிடம் மழையை வருசிக்கப் பண்ணி பஞ்சத்தைப் போக்குவதாக வாக்கு கொடுத்தார்.

எலியா ஆகாப்பை சந்தித்தல், எலியாவுக்கும் பாகால் கள்ள தீர்க்கதரிசிகளுக்கும் இடையே நடந்த சவால், பஞ்சத்தைப் போக்க வந்த மழை போன்ற சம்பவங்கள் மெய் சிலிர்க்க வைக்கும் வகையில் சொல்லப்பட்டுள்ளது (1இராஜா.18:17)

யெகோவா தேவனின் அனுக்கிரகத்தோடு எலியா எல்லா சவால்களையும் மேற்கொண்டு வெற்றி பெற்றதினால் ஆகாப்பின் மனைவி யெசபேலின் கடுங் கோபத்திற்கு உள்ளானாள். அவள் எலியாவை வனாந்திரத்திற்கு விரட்டி அடித்தாள். அங்கே அவர் வருத்தப்படுவதின் நிமித்தம் மனங்கசந்து, மரித்துப்போனால் நலமாயிருக்கும் என்று எண்ணினார். யெகோவா தேவன் அவனை நாற்பது நாட்கள் வனாந்திர வழியாய் வழிநடத்தி வந்து ஒரேப் வந்தான். ஒரேப் மலையிலே அல்லது கர்த்தரின் மலையில் ஓர் அற்புத அனுபவத்ப் பெற்றான். சப்தம் இல்லாத அமைதலான ஓசையின் மூலம் யெகோவாவாகிய கர்த்தர், திரும்பி போகச் சொல்லி, அவரைக் கைவிட்டு வந்த தீர்க்கதரிசன ஊழியத்தைத் தொடருமாறு ஏவினார். எலியா திரும்பிப் போகயில், எலிசாவைக் கண்டு, தன் சால்வையை எலிசாவின் மேல் போட்டு, அவரின் உழியத்தைத் தொடரச் செய்தார் (1இராஜா.19).

நாபோத் மரித்த இரண்டு வருடங்கள் கழித்த பிறகு, ஆகாப் தன் மனைவி யேசபேலின் பேச்சின் நிமித்தம் நாபோத்தின் நிலத்தை அபகரித்துக் கொண்டார். கர்த்தராகிய யெகோவாவின் ஏவுதலின் நிமித்தம் எலியா ஆகாப்பைக் கடிந்து கொள்ளச் சென்றார். அப்பொழுது ஆகாப், எலியா வருவதைக் கண்டு, நீர் என்னைக் கண்டு பிடித்தீரோ? என் பகைஞனேஸ்ஸ” என்று சொன்னான் (1இராஜா.21:20). ஆகாப் மனந்திருந்தி தன்னைத் தாழ்த்தின பின்பு அவர் மேல் விழுந்த ஆக்கினை தீர்ப்பு தள்ளிப் போடப் பட்டது. ஆனாலும், அந்த ஆக்கினைத் தீர்ப்பு நாளடைவில் நிறைவேறிற்று. ஆகவே, நம்முடைய பாவங்களுக்கான நியாத் தீர்ப்பு நாள் தள்ளிபோகலாம். ஆனால் நிச்சயம் அந்த நியாயத் தீர்ப்பு நிறைவேறியே தீரும்.

பின்பு, எலியா ஆகாபின் மகனாகிய அகசியாவுக்கு ஒரு தேவ தூதன்போல் தோன்றி அவரைக் கடிந்து கொண்டார். அகசியா அந்நிய தேவர்களை நாடித் தேடி சென்றார். எலியா அகசியாவின் திட்டத்தை வானத்திலிருந்து அக்கினியை வருஷிக்கப் பண்ணி, நிறைவேற விடாமல் தடுத்து நிறுத்தினார்.

எரிகோ மற்றும் பெத்தேல் ஊராராகிய தீர்க்கதரிசிகளின் கூட்டத்தாரை சந்திக்கச் சென்றார். அவர்களிடம் தன்னுடைய தீர்க்கதரிசன ஊழியம் ஒரு நிறைவுக்கு வருவதை முன்னமே அறிவித்தான். (2ராஜா.2:3) எலியாவும் எலிசாவும் எரிகோவை விட்டு யோர்தானுக்கு அபிபுறம் போகையில், ஐம்பது பேர் அடங்கிய தீர்க்கதரிசி கூட்டத்தார் அவர்களைக் பின் தொடர்நதார்கள். அந்த ஐம்பது தீர்க்கதரிசிகள் எலியா யோர்தான் நதியைத் தன் சால்வையால் அடித்துப் பிளப்பதைத் தங்கள் கண்களால் கண்டார்கள் (2ராஜா.8). எலிசா, எலியாவிடம் அவரிடம் இருக்கும் ஆவியின் அபிஷேகத்தின் வரம் இரண்டு மடங்கு வேண்டும் என்று கேட்டார். அதற்கு எலியா, அரிதான காரியத்தைக் கேட்டாய்; உன்னைவிட்டு நான் எடுத்துக் கொள்ளப்படுகையில் என்னை நீ கண்டால் உனக்குக் கிடைக்கும். இல்லாவிட்டால் கிடையாது என்றார். அவ்விருவரும் பேசிக் கொண்டு போகையில் அக்கினி மயமான ரதமும் குரிரைகளும் வந்து, அவ்விருவரையும் பிரித்தது. எலியா சுழல் காற்றிலேயே பரலோகத்திற்கு ஏறிப்போனார். இக்காட்சியை எலிசா தன் கண்களால் கண்டார் (2இராஜா.2:10-12).
எலியா உன்னதமான நெறிகளை உடையவராய் வாழ்ந்தார். எலியா கடவுளுக்காக உள்ளவனாயும் கடவுளைக் கனப்படுத்தினவனாயும், கட்டுப்பாடு உள்ளவனாயும், வாழ்ந்தார். கடவுளின் மனிதன் என்று பறைசாற்றுவதற்கு இக்குணாதியசங்கள் போதுமானது. இருப்பினும் பலமுறை ஆகாப், யெசபேல் மற்றும் பாகாலின் கள்ளத் தீர்க்கதரிசிகளிடமிருந்து பலமான எதிர்ப்புகளை சம்பாதித்தான். எலியாவின் பரம அழைப்பு, விக்கிரக ஆராதனையை முழுமையாய் எதிர்த்து அழித்தல் ஆகும். எலியா யெகோவாவின் பரிசுத்த வல்லமையை வெளிப்படுத்தினவராகவும் யெகோவாவை விட்டுப் பின் வாங்கிப் போனவர்களைத் தண்டித்தவனாயும் இருந்தார். எலியா அக்கினி மயமாய் எழுந்து, அவரின் வார்த்தை விளக்கைப் போல பிரகாசித்த்து. (பிரசங்கி 46:1),

பழைய ஏற்பாட்டில், முடிவுரை தீர்க்கதரிசனமாக, “கர்த்தர்ரின் நாள்” உரைப்பது என்னவென்றால், இதோ கர்த்தருடைய பெரிதும் பயங்கரமான நாள் வருகிறதற்கு முன்னே நான் உங்களிடத்திற்கு எலியா தீர்க்கதரிசியை அனுப்புகிறேன் (மல்கியா 4). புதிய ஏற்பாட்டிலே எலியாவை இயேசு கிறிஸ்துவின் முதல் வருகையோடு ஒப்பிடப்பட்டுள்ளது (மத்.16:14). மேலும் எலியா மறுரூப மலையின் தரிசன காட்சியில் இயேசுவோடும் மோசேயோடும் காணப்பட்டான் (மத்.17:11). யாக்கோபு தன் நிருபத்தில், எலியா பெரும் பாடு உள்ள மனிதன் என்றம் அவன் தன் பாடுகளின் மத்தியில் நீதிமானாய் வாழ்ந்தான் என்று குறிப்பிடுகிறான். அவன் ஊக்கமாக ஜெபித்து, அதற்குப் பதிலும் பெற்றுக் கொண்டான்.

எலியாவின் அடைவு நிலை
1.     எலியா யுதேயாவில் கீர்த்தி பெற்ற தீர்க்கதரிசியாயிருந்தார்.
2.     எலியா மூன்று ஆண்டு பஞ்சத்தைத் தீர்க்கதரிசனமாய் உரைத்தான்.
3.     எலியா தேவனைப் பிரதிநிதித்து, பாகாலின் கள்ளத் தீர்க்கதரிசிகளோடு மல்லு கட்டி நின்றான்.
4.     புதிய ஏற்பாட்டில் எலியா மோசேயோடு இயேசுவோடும் மறுரூபமாக மலையில் தரிசனமானான்.

எலியாவின் பெலவீனங்கள்.
1.     எலியா தனியாக ஊழியம் செய்ய எத்தனித்து, ஒடுக்கப்பட்டு தனிமையில் வாழ்ந்தார்.
2.     யேசெபேலுக்குப் பயந்து தன் உயிரைக் காப்பாற்ற ஓடி ஒளிந்தான்.

நாம் கற்றுக் கொள்ளும் பாடம்
1.     நாம் வெற்றியின் விளிம்பின் களிப்பில் இருக்கும்போதுதான் தோல்வி மிக அருகில் வருகிறது.
2.     நான் ஒருபோதும் தனித்து கைவிடப்படுவதில்லை. கடவுள் நம்மோடு எப்பொழுதும் இருக்கிறார்.
3.     கடவுள் பல சமயங்களில் மெல்லிய குரலில் நம்மோடு பேசுகிறார். அவர் நம்மோடு உரத்த குரலில் கத்துவது கிடையாது.

ஆதார வேதாக வசனங்கள்



சம்பாஷனைக் கேள்விகள்
1.     அவனின் ஊழியத்திற்கு யார் யார் எதிரியிடையாய் இருந்தனர்?
2.     கடவுள் எவ்வாறு அவரின் ஊழியங்களை ஆசீர்வதித்தார்?
3.     அவர், பாகாலின் கள்ள தீர்க்கதரிசிகளின் சவால்களை மேற்கொண்ட பிறகு, ஏன் தன் தேசத்தை விட்டு ஓடிப்போனான்?


மொழிபெயர்ப்பு:
ஜெ.ஜி.ராபின்சன் விக்டர்,
சிலிம் ரிவர், பேராக்

Friday, July 22, 2011

85. செப்பனியா தீர்க்கதரிசி




கரு வசனம்:தேசத்திலுள்ள எல்லாச் சிறுமையானவர்களே, கர்த்தருடைய நியாயத்தை நடப்பிக்கிறவர்களே, அவரைத் தேடுங்கள்; நீதியைத் தேடுங்கள், மனத் தாழ்மையைத் தேடுங்கள்; அப்பொழுது ஒருவேளை கர்த்தருடைய கோபத்தின் நாளிலே மறைக்கப்படுவீர்கள்.” (செப்பனியா 2:3)

வரலாற்றுச் சுறுக்கம்
v  மன நிறைவு கொண்ட ஜனங்களைக் குலுக்கிப் போடும் நோக்கம் கொண்டது.
v  யோசியா ராஜா தம் சீர்திருத்தத்தைத் தொடங்கினார்.
v  தேவன் தண்டனையைத் தீர்ப்பளித்த பின்னர் தமது கிருபையைக் காட்டுவார்.
v  தேவனிடத்தில் தொடர்ந்து விசுவாசம் காட்டுகிறவர்களுக்கு அவருடைய கிருபை கிட்டும்.


1.  முன்னுரைஅவர் வரலாறு

   இந்தப் புத்தகத்தின் நோக்கம் என்ன? தங்கள் சாதனையில் மன நிறைவு கொண்ட யூதா ஜனத்தாரைக் குலுக்கிப் போட்டு, தேவனண்டை மீண்டும் கிட்டிச் சேர இப்புத்தகம் எழுதப்பட்டது. செப்பனியா யூதா தேசத்தாருக்கும் உலகிலுள்ள மற்ற எல்லா ஜனத்தாருக்கும் இப்புத்தகத்தை எழுதினார். செப்னியா, தம் ஊழியத்தின் இறுதி காலக்கட்ட வாக்கில் (கி.மு.640-621) இப்புத்தகத்தை எழுதியிருக்கலாம். அக்காலக் கட்டத்தில்தான் யோசியா ராஜாவின் மாபெரும் மறுமலர்ச்சித் திட்டங்கள் நிறைவேற்றப் பட்டன.

   யோசியாவுக்கு முன்பு ஆட்சி செய்த மனாசே, ஆமோன் என்ற இரண்டு ராஜாக்கள் அமலுக்குக் கொண்டு வந்த பொல்லாங்கான பழக்க வழக்கத்தை நீக்கி விட அவர் எத்தனித்தார். யோசியாவை வெல்லக் கூடிய சக்தி வாய்ந்த அரசாங்கம் பூமியெங்கும் இல்லாத்தால், யோசியாவால் தம் செல்வாக்கை விரிவு படுத்த முடிந்தது. (அகாஸ்வேருவின் செல்வாக்கு அப்போது குன்றத் தொடங்கியது). செப்பனியாவின் தரிசணம் ஒரு வேளை யோசிவாவின் மறுமலர்ச்சிக்கு உந்துதலாக அமைந்திருக்கலாம். எரேமியாவும் யோசியாவும் ஒரே காலக்கட்டத்தில் வாழ்ந்தவர்கள் ஆவர்.

   தேவனின் தீர்க்கதரிசி என்ற முறையில் செப்பனியா சத்தியத்தைப் பேச உந்தப்பட்டான் தேவனுக்குக் கீழ்ப்படியாத ஜனங்கள் சந்திக்கப் போகிற அதிரடியான தீர்ப்புகள், அகோரமான தண்டனைகள் யாவற்றையும் துணிந்து அறிவித்தார். தேவனின் பொறுமை கடந்த மூர்க்கம் ஜனங்களை இந்நிலத்தில் இருந்து பெருக்கியெடுத்தி அழித்துப் போடும். மனிதர்களும் விலங்குகளும் ஒருசேர அழிந்து போவார்கள்; நான் ஆகாயத்துப் பறவைகளையும், சமுத்திரத்து மச்சங்களையும், இடறுகிறதற் கேதுவானவைகளையும் துன்மார்க்கரோடேகூட வாரிக்கொண்டு, தேசத்தில் உண்டான மனுஷரைச் சங்காரம் பண்ணுவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்” (1:3). எந்த உயிரினமும் இப்பூமியில் தப்பாது. அந்த பயங்கரமான நாள் வெகு சமீபமே கூடிய விரைவில் நிகழும் அளவுக்கு நெறுங்கி விட்டது. கேள்! அந்நாளில் மிகவும் மனக் கசப்பான அளுகை உண்டாகும். யுத்த வீர்ர்களும் கூக்குரல் இடுவார்கள். கர்த்தருடைய பெரிய நாள் சமீபித்திருக்கிறது; அது கிட்டிச்சேர்ந்து மிகவும் தீவிரித்து வருகிறது; கர்த்தருடைய நாளென்கிற சத்தத்துக்குப் பராக்கிரமசாலி முதலாய் அங்கே மனங்கசந்து அலறுவான். அந்த நாள் உக்கிரத்தின் நாள்; அது இக்கட்டும் இடுக்கமுமான நாள்; அது அழிவும் பாழ்க்கடிப்புமான நாள்; அது இருளும் அந்தகாரமுமான நாள்; அது மப்பும் மந்தாரமுமான நாள்” (1:14-15). அவருடைய நேயர்களால் அந்த ஒடுக்கப் படுதலையும் வியாகூலத்தையும் உணர முடியும். அதி விரைவாக அவர்கள் விசாரிக்கப்பட்டு, பாதாளத்திற்குத் தள்ளப்படுவார்கள்.

   இந்தப் பயங்கரமான அறிக்கையின் மத்தியிலும் நம்பிக்கையான செய்தியும் கூறப்பட்டது. செப்பனியாவின் முதல் அதிகாரம் முழுவதும் பயங்கரமான சம்பவங்களின் தரிசணங்கள் கூறப்பட்டுள்ளன. ஆயினும் இரண்டாவது அதிகாரத்தில், ஒரு மெல்லிய வாக்குத்தத்தம் அறிவிக்கப் படுகிறது.தேசத்திலுள்ள எல்லாச் சிறுமையானவர்களே, கர்த்தருடைய நியாயத்தை நடப்பிக்கிறவர்களே, அவரைத் தேடுங்கள்; நீதியைத் தேடுங்கள், மனத் தாழ்மையைத் தேடுங்கள்; அப்பொழுது ஒரு வேளை கர்த்தருடைய கோபத்தின் நாளிலே மறைக்கப்படுவீர்கள்” (2:3). அதனைத் தொடர்ந்து வரும் வசனங்களில்,அந்தத் தேசம் யூதா வம்சத்தாரில் மீதியானவர்களின் வசமாகும்; அவர்கள் அவ்விடங்களில் மந்தை மேய்ப்பார்கள்; அஸ்கலோனின் வீடுகளிலே சாயங்காலத்திலே படுத்துக் கொள்வார்கள்; அவர்களுடைய தேவனாகிய கர்த்தர் அவர்களை விசாரித்து, அவர்கள் சிறையிருப்பைத் திருப்புவார்.” (2:7) என்று எழுதப்பட்டுள்ளது.


   இறுதியாக மூன்றாவது அதிகாரத்தில், தம்மிடத்தில் விசுவாசமாக நிலைத்திருப்பவருக்கு அவருடைய கிருபை நிச்சயம் நிலைத்திருக்கும் என்று முழங்கப்படுகிறது. “சீயோன் குமாரத்தியே, கெம்பீரித்துப் பாடு; இஸ்ரவேலரே, ஆர்ப்பரியுங்கள்; எருசலேம் குமாரத்தியே, நீ முழு இருதயத்தோடும் மகிழ்ந்து களிகூரு. கர்த்தர் உன் ஆக்கினைகளை அகற்றி, உன் சத்துருக்களை விலக்கினார்; இஸ்ரவேலின் ராஜாவாகிய கர்த்தர் உன் நடுவிலே இருக்கிறார்; இனித் தீங்கைக் காணாதிருப்பாய்.” (3:14-15). ஒரு நம்பிக்கை பிறந்திருக்கிறது என்பது சத்தியம். இந்த நம்பிக்கை, தேவனுடைய நியாயத் தீர்ப்பிலும் அவருடைய ஜனங்களின் மீதான அன்பிலும் சார்ந்திருக்கிறது.


   தேவன் பாவத்தை அற்பமாகக் கருத மாட்டார் என்று செப்பனியா நினைவுறுத்துகிறார். பாவத்தின் நிமித்தம் நாம் தண்டிக்கப் படுவோம். ஆனால், அவர் ஊட்டுகிற நம்பிக்கையில் நாம் சார்ந்திருக்கலாம் – அவர் நம்மை ஆள்பவர். அவர் தமது ஜனங்களை இரட்சிப்பார். அவருடைய தண்டனைக்குத் தப்பித்துக் கொள்கிற எஞ்சியவர்களில் நீயும் ஒருவராக இருக்க விசுவாசத்தோடு தாழ்மையாக்க் கர்த்தராகிய தேவனைத் தொழுது கொள்!
   செப்பனியா யூதாவின் தீர்க்கதரிசியாக கி.மு.640-621ல் செயல்பட்டார்.



2.  அவருடைய செய்திகளில் பிரதானமானவை

   a)  வாழ்ந்த காலக்கட்டத்தின் நிலவரம்:  கடைசியாக ஆட்சி செய்த நீதியான ராஜாக்களில் இவரும் ஒருவர். தம் ஜனங்களை மீண்டும் தேவனண்டை கிட்டிச் சேர்க்க அவர் தீவிரமாக ஈடுபட்டது ஒருவேளை செப்பனியாவின் தாக்கத்தால் அமைந்திருக்கலாம்.

   b)  பிரதான செய்தி:         அனைத்து ஜனங்களும் தண்டிக்கப்படவிருக்கும் அந்த நாள் திண்ணமாக வரும். ஆனால், அதன் பிறகு, தம்மிடத்தில் விசுவாசமாய் இருப்பவர்களுக்குத் தேவன் இரக்கம் காட்டுவார்.


   c)  அச்செய்தியின் முக்கியத்துவம்:      கீழ்ப்படியாமையின் நிமித்தம் நாம் அனைவரும் தேவனால் தண்டிக்கப்படுவோம்; ஆனால், நாம் தொடர்ந்து அவருக்குக் கீழ்ப்படிந்தால், தேவன் நம்மிடத்தில் இரக்கங் காட்டுவார்.


   d)  சமகால தீர்க்கதரிசி:      எரேமியா (கி.மு. 627 – 586)


3.  முக்கிய கருப்பொருள்கள்

   கருப்பொருள்கள்            விளக்கம்/முக்கியத்துவம்

    நியாயத்தீர்ப்பின் நாள்       யூதாவின் ஜனங்கள் தேவனை மறந்து விட்டதால் அழிவு அவர்களை நெருங்கி வந்தது. ஜனங்கள் பாகால், அஸ்தரோத், மோளேக்கு, நட்சத்திரக் கற்களையும் போன்ற பலவிதமான விக்கிரகங்களை வணங்கி வந்தனர். ஆசாரியர்கள் கூட தங்கள் தெய்வ வணக்கத்தில் விக்கிரக  ஆராதனைகளைக் கடைபிடித்து வந்தனர். ஆண்டவரும் தம் தண்டனையை அனுப்பி விட்டார்.
                             அவருடைய தண்டனையில் இருந்து தப்பித்துக் கொள்ள, நாம் அவருடைய உத்தரவுக்குச் செவி சாய்த்து, அவருடைய கண்டனத்திற்குக் கீழ்ப்படிந்து, விசுவாசத்தோடு அவருடைய வழிநடத்துதலை நாட வேண்டும்.



   ஆண்டவரை உதாசீனப்படுத்துதல்: பலவிதமான புத்திமதிகள் எடுத்துக் கூறப்பட்டும், யூதாவின் ஜனங்கள் தங்கள் பாவங்களைக் குறித்து மனஸ்தாபப்படவில்லை. செல்வச் செழிப்பில் திழைத்திருந்ததால், ஆண்டவரைப் பற்றி அவர்கள் கவலைப்படவில்லை. உத்தமமாக வாழ ஆண்டவர் வற்புறுத்தினாலும், யூதாவின் ஜனங்களுக்கு அது, ஏற்புடையதாகத் தெரியவில்லை. அவர்களுடைய செல்வத்தினால் உண்டான செழிப்பு அவர்களுக்கு திருப்தியைத் தந்து மயக்கத்தில் ஆழ்த்தியது.



   களிகூறும் நாள்:            நியாயத் தீர்ப்பின் நாள் களிகூறும் நாளாகவும் திகழும். தம் ஜனங்களைத் துன்புறுத்தியவர்கள் தண்டிக்கப்படுவார்கள். எல்லாவிதமான பாவங்களையும் துன்மார்க்கங்களையும் அகற்றி தேவன் தம் ஜனங்களைப் பரிசுத்தப்படுத்துவார். தேவன் தம் ஜனங்களை மீட்டு, புதிய நம்பிக்கையைத் தருவார். நாம் முற்றிலுமாக மீட்கப்பட்ட நிலையில், அந்தப் பேரிகையின் நாளுக்காக்க் காத்திருக்கலாம்.

4.  வேதாகம மேற்கோள்கள்:

a)  NIV Study Bible, பக். 1594-1602
b)  A R Buckland, The Universal Dictionary, பக்.508
c)   The IDB, Vol.R-Z, பக்.951-953
d)   Baker Encyclopedia of the Bible (Vol.2), பக்.2190-2193


5.  சம்பாஷனைக்கான கேள்விகள்:
5.1  தீர்க்கதரிசி, சீர்திருத்த்த்திற்காக ராஜாவை வற்புறுத்தினார். அந்த ராஜா யார்?
5.2 அவருடைய பிரதான செய்தி யாது?
5.3 அவருடைய செய்தியின் முக்கியத்துவம் யாது?
5.4 செப்பனியா காலத்தில் வாழ்ந்த மற்றொரு தீர்க்கதரிசி யார்?