கரு வசனம்:
"சீயோன் குமாரத்தியே, மிகவும் களிகூரு; எருசலேம் குமாரத்தியே, கெம்பீரி; இதோ, உன் ராஜா உன்னிடத்தில் வருகிறார்; அவர் நீதியுள்ளவரும் இரட்சிக்கிறவரும் தாழ்மையுள்ளவரும், கழுதையின்மேலும் கழுதைக் குட்டியாகிய மறியின் மேலும் ஏறி வருகிறவருமாயிருக்கிறார். எப்பிராயீமினின்று இரதங்களையும் எருசலேமினின்று குதிரைகளையும் அற்றுப் போகப் பண்ணுவேன், யுத்த வில்லும் இல்லாமற் போகும்; அவர் ஜாதிகளுக்குச் சமாதானம் கூறுவார்; அவருடைய ஆளுகை ஒரு சமுத்திரந் தொடங்கி மறு சமுத்திரம் வரைக்கும், நதி தொடங்கிப் பூமியின் எல்லைகள் பரியந்தமும் செல்லும்.” (சகரியா 9:9-10)
வரலாற்றுச் சுறுக்கம்
v பாபிலோனிய அடிமைத் தனத்தில் இருந்து விடுதலை பெறுதல்.
v சகரியா தீர்க்கதரிசியாகவும் ஆசாரியராகவும் திகழ்ந்தார். (நெகே.12:4, 16)
v மேசியாவின் மூலம் கிடைக்கப் போகிற விடுதலையைப் பறை சாற்றினார்.
v எரிசலேம் ஆலயத்தை மீளக் கட்ட உதவினார்.
v தேவையான ஊக்கத்தை வழங்கினார்.
1. முன்னுரை – அவன் வரலாறு
சகரியா என்றால் ‘யெகோவா நினைவு கூறுகிறார்’ என்று பொருள் படும். எரோபெயாம் இஸ்ரேலிய குடும்பத்தாரின் கடைசி ராஜா. ஆறே ஆறு மாதம்தான் ஆட்சி நடத்தினார். சல்லும் என்பவனின் சூழ்ச்சியால் கொல்லப்பட்டார். ஜனங்களின் விக்கிரக ஆராதனையை அனுமதித்தார் (2ராஜா.14:29) பாபிலோனிய அடிமைத் தனத்தில் இருந்து தாயகம் திரும்பிய யூதர்களுக்கும் உலகமெங்கும் உள்ள தேவ ஜனங்கள் அனைவருக்கும் தீர்க்கதரிசனம் எழுதினான். பாபிலோனிய அடிமைத் தனத்தின் போது பிறந்த சகரியா, கி.மு.538ல் தாயகம் திரும்பிய போது வாலிபபிராய வயதுடையவனாய் இருந்தார். பாரசீகத்தின் கோரேஸ் ராஜா பாபிலோனிய அரசை கி.மு.539ல் வீழ்த்தி, அங்கு அடிமைப்பட்டு கிடந்த ஜனங்களைத் தங்கள் தாயகம் திரும்ப அனுமதித்தான். இப்படி தாயகம் திரும்பியவர்களில் சகரியாவும் ஆகாயும் முன் வகிக்கின்றனர். தீர்க்கதரிசியும் ஆசாரியனுமாயிருந்த சகரியா, ஆகாயின் காலக் கட்டத்திலேயே (கி.மு.520-518ல்) தன் அருட் பணியைத் தொடங்கினார். ஆகாய் முதன் முறையாக தீர்க்க தரிசனம் உரைத்த இரண்டு மாதக் காலக் கட்டத்தில் சகரியாவும் தன் முதல் தீர்க்கதரிசனத்தை உரைத்தார். முதல் 8 அதிகாரங்கள் கி.மு.520-518ல் எழுதப்பட்டதாக கூறப்படுகிறது. பிந்திய ஆறு அதிகாரங்கள் கி.மு.480ல் எழுதப்பட்டிருக்கலாம். மேசியா மூலம் தேவனால் தம் ஜனங்களுக்கு அருளப்படப் போகிற சுயாதீனத்தைக் குறித்த நம்பிக்கைக்காக இப்புத்தகம் எழுதப்பட்டது.
பழைய ஏற்பாட்டின் ஈற்றில் மறைந்திருக்கிற சிறிய தரிசன புஸ்தகமாக சகரியா புஸ்தகம் திகழ்கிறது. அடிமைத்தன காலக் கட்டத்திற்குப் பிந்திய மூன்று சிறிய தீர்க்கதரிசிகளில் ஒருவராக சகரியா திகழ்கிறார். ஆகாயும் மல்கியாவும் மற்ற இருவர் ஆவர். சகரியா, தங்கள் தேவாலயத்தை மீளக் கட்டுவதற்காக யூதேயா தேசத்திற்குத் திரும்பிய சொற்ப யூதர்களுக்கு மத்தியில் ஊழியம் செய்தார். ஆகாயைப் போல், சகரியாவும் தேவாலய மறு கட்டுமானத்திற்காக ஜனங்களை ஊக்கப்படுத்தினார். ஆனால், அவருடைய ஊக்கவுரை கற்சுவர்களையும் தற்காலத் தேவைகளையும் கடந்து சென்றது. மிடுக்கும் தெளிவும் நிறைந்த வெளிப்பாடுகளோடு, சகரியா, தேவ ஜனங்களை இரட்சித்து, உலகம் முழுவதும் வியாபிக்கப் போகும் இரட்சகரைக் குறித்து அறிவித்தார். இயேசு கிறிஸ்துவின் மூலம் கிடைக்கப் போகிற இரட்சிப்பைக் குறித்து தெள்ளந் தெளிவான ஆதாரங்களோடு எடுத்துக் கூறியதில் சகரியாவின் தீர்க்கதரிசன புஸ்தகம் முக்கிய ஸ்தானத்தைப் பிடிக்கிறது. மேசியாவின் வருகைக்கான கடைசி காலக் கட்டத்தின் ஆரம்ப நிகழ்வாகவே இந்த தேவாலயத்தின் மீளக் கட்டும் பணி அமைகிறது, என்று சகரியா கூறினார். இது அடிமைத் தனத்தில் இருந்து விடுதலை பெற்ற தனது ஜனங்களுக்கு உணர்ச்சிப் பூர்வமான செய்தியாகும்.
இயேசுவானவரே மேசியா. இஸ்ரவேலர்களுக்காக வாக்குத் தத்தம் செய்யப்பட்ட ‘மாபெரும் மீட்பர்’. சகரியாவின் செய்தியைக் கேட்டவர்கள் போலல்லாமல், கிறிஸ்துவின் உழியத்தையும் பெரும்பணியையும் நாம் காணலாம். சகரியாவின் தீர்க்கதரிசனைத்தை ஆராயும் போது, இயேசு கிறிஸ்துவின் காலத்துக்கு 500 ஆண்டுகளுக்கு முன்பாகவே, தெள்ளந் தெளிவாக எழுதப்பட்ட, நிறைவேறவிருக்கும் வாக்குத் தத்தங்களைக் காணலாம். தேவன் தம் வாக்குத்தத்தத்தை மறப்பதில்லை. ஆகிலும், இன்னும் நிறைவேறாத வாக்குத்தத்தங்களும் உள்ளன – கடைசி காலத்தில் கிறிஸ்துவின் வருகையே அது. நம் ராஜா வருகிறார். அவர் நித்திய காலமும் ஆளுகை செய்வார்
எதிர்காலத்தைத் தேவன் அறிந்து வைத்திருப்பதோடு, தம் கட்டுப்பாட்டுக்குள்ளும் வைத்திருக்கிறார். சகரியாவின் புஸ்தகம் நமது விசுவாசத்தைப் பெலப்படுத்துவதாக. அவர் மாத்திரமே நமது நம்பிக்கையும் பாதுகாப்புமானவர்.
2. இப்புத்தகத்தின் சிறப்பம்சம்
சகரியா யூதாவின் தீர்க்கதரிசியாக அவர்கள் அடிமைத் தனத்தில் இருந்து மீண்ட பிறகு கி.மு.520ல் வழ்ந்தவர்.
a) காலக்கட்ட நிலவரம்: ஜனங்கள் தங்கள் அடிமைத் தனத்தில் இருந்து தேவாலயத்தில் மீளக் கட்டத் திரும்புகின்றனர். ஆனால், அப்பணிகள் கிடப்பில் போடப்பட்டு, ஜனங்கள் தேவனுக்குச் செய்ய வேண்டிய கடமையை அலட்சியப்படுத்துகின்றனர்.
b) பிரதான செய்தி: ஆகாயைப் போல சகரியாவும் தேவாலயத்தைக் கட்டி முடிக்கும்படி ஜனங்களை உற்சாகப்படுத்துகிறார். அவருடைய தரிசனம் மக்களுக்கு புதிய நம்பிக்கையைத் தருகிறது. வரப்போகிற ராஜா பிற்காலத்தில் ஒரு நிலையான ராஜ்யத்தைக் கட்டப் போகிறார் என்று அவர் ஜனங்களுக்கு நினைவுறுத்துகிறார்.
c) செய்தியின் முக்கியத்துவம்: வியாகூலங்கள் மத்தியில் நாம் நம்பிக்கையிழந்து போனாலும் தேவன் தம் திட்டத்தை நிறைவேற்றுகிறார். அவர் நம்மைக் காப்பதோடு, வழி நடத்தவும் செய்கிறார். நாம் அவருக்கு விசுவாசித்துக் கீழ்ப்படிவது கடமையாய் இருக்கிறது.
d) சமகால தீர்க்கதரிசி: ஆகாய் (கி.மு. 520 B.C).
3. பிரதான கருப் பொருள்கள்
கருப்பொருள்கள் விளக்கம்/முக்கியத்துவம்
a) தேவனின் எரிச்சல்: ஆண்டாண்டு காலமாக தமது தீர்க்கதரிசிகளைப் புரக்கனித்து வந்த ஜனங்கள் மீது தேவன் எரிச்சல் கொண்டார். (அவர்கள் அஜாக்கிரதையாக சூழ்ச்சிகரமான பொய்யுரையாளர்களைப் பின்பற்றி வந்துள்ளனர்). கீழ்ப்படியாமையே அவர்களின் பிரச்சனைக்கு வேராகவும், விசனத்திற்குக் காரணமாயும் இருந்துள்ளது.
நாம் அவர் முகம் காண வேண்டும்; அவருக்குக் கீழ்ப்படிய வேண்டும்; பிறரையும் சரியாக வழி நடத்திச் செல்கிறோமா என்பதையும் உறுதி செய்து கொள்ள வேண்டும்.
b) தேவாலயத்தை மீளக் கட்டுதல்: யூதர்கள் ஊக்கமிழந்து போயிருந்தனர். அவர்கள் அடிமைத்தனத்தில் இருந்து விடுதலை பெற்று வந்தாலும், தேவாலயப் பணி பூர்த்தியடையவில்லை. சகரியா, இப்பணியைப் பூர்த்தி செய்யுமாறு ஜனங்களை உற்சாகப்படுத்தினார். தேவன் தமது பணியாளர்களைக் காத்து வழிநடத்துவதோடு, தம் பணியைப் பூர்த்தி செய்ய பரிசுத்த ஆவியானவரால் ஆளுகையும் செய்வார்.
அவருடைய பணியைப் பூர்த்தி செய்வது நமது கடமை. இதற்குப் பரிசுத்த ஆவியானவரின் உதவி தேவைப்படுகிறது. இத்தேவையைத் தேவன் பூர்த்தி செய்வார்.
c) ராஜா வருகிறார்: ஓர் ஊழியனாக நமக்காக மரிக்கும் பொருட்டு மேசியா வந்தார். வெற்றி வீரராகத் திரும்பச் செல்வார். தம் ஜனங்களை பாவத்தில் இருந்த விடுவிக்கவும் ஆளுகை செய்யவும் மேசியா வருவார். தமது ராஜ்யத்தை விஸ்தரித்து, பகைவர்களை வென்று, உலகை ஆள்வார். ராஜாதி ராஜனின் வெற்றிப் பேரிகையோடான வருகைக்காக ஆயத்தம் செய்யும் பொருட்டு, நம்மை அவர் தலைமைத்துவத்திற்குச் சமர்ப்பிப்போம்.
d) தேவனின் பாதுகாப்பு: சகரியாவின் காலத்தில் தேவனுடைய திட்டத்திற்கு எதிர்ப்பு இருந்தது. வருங் காலங்கள் பொல்லாத்தாய் இருக்கும் என்று சகரியா அவர்களைத் தன் தீர்க்கதரிசனத்தில் எச்சரித்தான். ஆனால், தேவனுடைய வாக்குத்தத்தமே நிறைவேறியது. தம் ஜனங்களோடு புரிந்து கொண்ட ஒப்பந்தத்தைத் தேவன் நினைவு கூர்ந்தார். தம் ஜனங்களுக்காகப் பரிதவிக்கும் நமது தேவன், நம்மை முறித்துப் போடும் அனைத்து மாம்சமான எதிர்ப்புகளில் இருந்தும் விடுவிப்பார்.
எல்லா பொல்லாங்கும் தொடர்நது நீடிக்கும்; தேவனுடைய அளவில்லா அன்பும் தனிப்பட்ட அக்கறையும் யுகங்கள் தோறும் பிரஸ்தாப்ப் படுகின்றன.
4. வேதாகம மேற்கோள்கள்
a) வேதாகம்ம்: NIV Study Bible, பக்.1608-1626
b) A R Buckland, The Universal Bible Dictionary, பக்.504
c) The IDB, Vol.R-Z,pp.941-947
d) Baker Encyclopedia of the Bible (Vol.2), பக்.2182-2187
5. கலந்துரையாடலுக்கான கேள்விகள்
5.1 அவருடைய பெயரின் பொருள் என்ன?
5.2 யூதர்கள் கட்டுமபடியாக கட்டளையிடப் பட்ட கட்டிடம் எது?
5.3 அவர் வலியுறுத்தி கூறிய செய்தி என்ன?
5.4 அவருடைய சமகாலத்தில் வாழ்ந்த தீர்க்கதரிசி யார்?
5.5 யூதர்கள் எந்த தேசத்தில் இருந்து விடுதலை பெற்றுத் திரும்பினர்?
No comments:
Post a Comment