முக்கிய வசனம்
“அதற்கு ஆதாம் என்னுடனே இருக்கும்படி தேவரீர் தந்த ஸ்திரியானவள் அவ்விருட்சத்தின் கனியை எனக்குக் கொடுத்தாள். நான் புசித்தேன் என்றான்: (ஆதி.3.12)
ஆதாமுக்குள் எல்லாரும் மரிக்கிறது போல, கிறி1துவுக்குள் எல்லாரும் உயிர்ப்பிக்கப்படுவார்கள். (1கொரி.15.22)
சுருக்கமான குறிப்புகள்
· முதலாவது மனிதன்; அவன் மனைவி ஏவாள்.
· அவன் தனிமையாயிருப்பதை தேவன் கண்டு அவனுக்கு ஏற்ற துணையாக ஏவாளை சிருஷ்டித்தார்.
· இருவரும் தேவனுக்கு விரோதமாகப் பாவம் செய்தார்கள். இருவரும் தேவனுக்கு வரோதமாகக் கலகம் செய்தனர்.
· முதலாவது தேவனோடு தனிப்பட்ட உறவு கொண்டு சந்தோஷமாக இருந்தார்கள்.
· ஏவாளோடு சேர்ந்து ஆதாம் இந்த உலகத்திற்குள் பாவத்தைக் கொண்டு வந்தான்.
1. முகவுரை – அவன் சரித்திரம்
அவனுடைய பெயர் மனிதவர்க்கம் (மானிட ஜாதி) என்று பொருள்படும். உலகத்தில் முதலாவது மனிதனாகத் தான் ஒருவன் மாத்திரமே இந்த உலகில் இருப்பது எப்படி இருக்கும் என்பதை நாம் கற்பனை செய்வது மிகக் கடினம். தனிமையாக இருப்பது ஒரு காரியம். ஆனால், ஆதாமைப் பொறுத்தவரையில் அவன் வேறு எந்த ஒரு மனிதனையும் அறிந்ததேயில்லை. நாம் இருக்கிற விதமாக நம்மை உருவாக்குகிற சிறுபிள்ளைப் பருவம் அவனுக்குக் கிடைக்கவில்லை. அவனுக்குப் பெற்றோர், குடும்பம் அல்லது நண்பர்கள் யாருமே இல்லை. ஆனால், அவன் அதிகமாகக் கஷ்டப்படவிடாமல், வெகு சீக்கிரமே அவனுக்கு ஏற்ற துணையாக ஏவாளைக் கொடுத்தார். இருவரும் வெட்கப்படாமல், கபடமில்லாத முழுமையான வாழ்க்கையை வாழ்ந்தார்கள்.
ஆதாம் தன்னுடைய புதிய துணைவியான ஏவாளிடம் தோட்டத்தைப் பற்றிய விதிமுறைகளைப் பற்றிதான் முதலாவது பேசியிருந்திருப்பான். ஏவாளைச் சிருஷ்டிப்பதற்கு முன்பே தேவன் ஏதேன் தோட்டத்தில் ஆதாமுக்கு நல்ல சுதந்திரமும் அத்துடன் அதைப் பண்படுத்திக் காக்கும் பொறுப்பையும் கொடுத்திருந்தார். ஆனால் நன்மை தீமை அறியக்கூடிய விருட்சத்தின் கனியை மட்டும் புசிக்க வேண்டாம் என்று தேவன் கட்டளையிட்டிருந்தார். இவையெல்லாவற்றையும் ஆதாம் தன் மனைவியாகிய ஏவாளிடம் சொல்லியிருப்பான். சாத்தான் அவளிடம் வந்த போது அந்த விருட்சத்தின கனியைப் புசிக்கக் கூடாது என்று அவள் நன்கு அறிந்திருந்தாள். இருந்த போதிலும் அவள் அந்தக் கனியைப் புசிக்கத் தீர்மானித்தாள். ஆதாமும் அதைப் புசிக்கும்படி கொடுத்தாள். ஆதாமும் அதன் விளைவை எண்ணிப் பார்க்காததுதான் வருந்தத் தக்க காரியம். ஏவாளின் வார்த்தைக்கு இணங்கி அதைப் புசித்தான்.
அந்த அற்பநிமிஷக் கீழ்ப் படியாமையினால் மிகப் பெரியதும் அழகானதும், இலவசமானதுமான ஒன்று சிதறிப் போய் விட்டது. அதுதான் தேவனுடைய பழுதற்ற சிருஷ்டிப்பு. தன்னிஷ்டம் போல் செயல்பட மனிதன் விரும்பினதினால் தேவனிடமிருந்து பிரிக்கப் பட்டான். ஒரு கண்ணாடி ஜன்னலில் சிறியை கல்லையோ அல்லது பெரிய கல்லையோப வீசி எறிந்தாலும் அதன் விளைவு ஒன்றே. உடைந்து போகும் கண்ணாடித் துண்டுகளை ஒன்று சேர்க்க முடியாது.
மனிதனின் பாவத்தைக் குறித்த விஷயத்தில் அந்த மீறுதலின் விளைவை மேற்கொள்ள தேவன் ஏற்கெனவே ஒரு திட்டம் வைத்திருந்தார். இந்தத் திட்டம் என்ன என்பதை வேதாகமம் முழுவதும் ஒரு சரித்திரமாகக் கூறி வெளிப்டுத்துகிறது. இறுதியாகத் தமது குமாரனாகிய இயேசுவின் மூலமாக தேவன் எவ்வாறு இந்த உலகத்திற்கு வந்தார் என்பதையும் கூறிகிறது. அவருடைய பாவமில்லாத வாக்கையும் மரணமும், பாவ மன்னிப்பை விரும்பும் அனைவருக்கும் தேவன் பாவ மன்னிப்பு அருளுவதை சாத்தியமாக்கிற்று. சிறியதும் பெரியதுமான நமது மீறுதல்கள் நாமும் ஆதாமின் சந்ததியார் என்பதை நிரூபிக்கின்றன. இயேசு கிறிஸ்து நம்பாவங்களை மன்னிக்கும்படி கேட்பதன் மூலமாக மாத்திரமே நாம் தேவனடைய பிள்ளைகளாகிறோம்.
2. பலமும் சாதனைகளும்
a. முதலாவது மிருக சாஸ்திர நிபுணர் – மிருகங்களுக்குப் பெயர் வைத்தல்.
b. தோட்டத்தை அழகுபடுத்திப் பராமரிக்கும் பணியில் ஈடுபட்ட முதல் மனிதன்.
c. மனுக்குலத்தின் தகப்பன்.
d. தேவ சாயலில் சிருஷ்டிக்கப்பட்ட முதலாவது மனிதன். தனிப்பட்ட முறையில் தேவனோடு நெருங்கிய உறவைப் பகிர்ந்து கொண்ட முதலாவது மனிதன்.
3. பெலவீனங்களும் தவறுகளும்.
a. தன்னுடைய பொறுப்பைத் தள்ளிவிட்டு மற்றவர்கள் பேரில் குற்றம் சாட்டினான். குற்றத்தை எதிர்க்கச் சக்தியில்லாமல் ஒளிந்து கொள்வதைத் தெரிந்து கொண்டான். உண்மையை ஒத்துக் கொள்வதற்குப் பதிலாக சாக்குபோக்கு கூறினான்.
b. உலகத்திற்குள் பாவத்தைக் கொண்டுவரும்படி ஏவாளுடன் சேர்ந்து கொண்டது அவன் செய்த மிகப் பெரிய தவறு.
4. அவன் வாழ்க்கையிலிருந்து கற்கக்கூடிய பாடங்கள்.
a. ஆதாமுடைய சந்த்தியைச் சேர்ந்த நாம் அனைவரும் தேவனுடைய சாயலைப் பெற்றிருக்கிறோம்.
b. தவறு செய்யக் கூடியவர்களாக இருந்தபோதிலும் அவ்வாறு செய்யாமல், தம்மை நேசிப்பதைத் தெரிந்து கொள்ளும் மக்களையே தேவன் விரும்புகிறார்.
c. நாம் செய்யும் தவறுகளுக்கு மற்றவர்களைக் குற்றப்படுத்தக் கூடாது.
d. நாம் தேவனிடமிருந்து நம்மை ஒளித்துக் கொள்ள முடியாது.
5. வாசிக்க வேண்டிய வேத பகுதிகள்:
6. விவாதிக்க வேண்டிய கேள்விகள்:
a. ஆதாம் என்ற பெயரின் அர்த்தம் என்ன?
b. அவனுடைய பலம் என்ன?
c. அவனுடைய பெலவீனங்கள் என்ன?
d. அவனுடைய வாழ்க்கையிலிருந்து என்ன கற்றுக் கொள்ளலாம்?
e. இரண்டாவது ஆதாம் என்று அழைக்கப்படுவது யார்?
f. அவர் ஏன் இரண்டாவது ஆதாம் என்று அழைக்கப் படுகிறார்?
மொழிபெயர்ப்பு:
திருமதி டப்னி ஜோசப்
No comments:
Post a Comment