Bishop Datuk Dr. S.Batumalai Ph.D

Bishop Datuk Dr. S.Batumalai Ph.D
பேராயர் டத்தோ டாக்டர் எஸ்.பத்துமலை

மேற்கு மலேசிய ஆங்கிலிக்கன் திருச்சபையின் உதவிப் பேராயர் டாக்டர் எஸ்.பத்துமலை

பேராயர் டாக்டர் எஸ்.பத்துமலை நடத்துகிற நீள்விரி இறையியல் கல்விக்கான பாடப் பொருள்களை நான் மொழி பெயர்த்து வருகிறேன். இப்பாடப் பொருள்கள் உலகமெங்கும் வியாபித்துக் கிடக்கிற தமிழ்க் கிறிஸ்த்வர்கள் பயனுள்ளவையாக அமையவேண்டும் என்பதற்காக இந்த வலைமனையில் இவற்றைப் பதிப்பிக்கிறேன்.

Thursday, March 15, 2012

109. பாக்கியவதியான கன்னி மரியாள்


நமது ஆண்டவரின் தாயார்

முக்கிய வசனம்
அதற்கு மரியாள்: இதோ, நான் ஆண்டவருக்கு அடிமை, உம்முடைய வார்த்தையின்படி எனக்கு ஆகக்கடவது என்றாள். அப்பொழுது தேவதூதன் அவளிடத்திலிருந்து போய்விட்டான்.  (லூக்கா 1.38)

சுருக்கமான குறிப்பிகள்
·         கிறிஸ்துவின் தாயாராக தேவன் மரியாளைத் தெரிந்தெடுத்தார்.
·         குழந்தை பிறப்பதற்கு முன்னே இவள் யோசேப்புக்கு நியமிக்கப்பட்டிருந்தாள்.
·         இயேசுவுக்காக இவள் அதிகமான துன்பத்தைச் சகித்தாள்.
·         இயேசு சிலுவையில் அறையப்பட்ட போது இவள் சிலுவையின் அடிவாரத்தில் நின்றாள்.
·         தேவன் ஒரு அற்புதத்தைச் செய்யும் படியாகத் தன்னை உபயோகிகும்படி தன்னை ஒப்புக் கொடுத்தாள்.
·         இயேசுவைத் தவிர மரியாளுக்கு 4 ஆண் குழந்தைகளும் (யாக்கோபு, யோசேப்பு, சீமோ, யூதா) சில பெண் குழந்தைகளும் பிறந்தனர் (மத்தேயு 15.55-56).


1.     முகவுரை – இவளுடைய சரித்திரம் – பெண்கள் எல்லாரிலும் மேலானவள்
யோசேப்புடன் திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்த நாளுக்கு ஒரு சில தினங்கள் முன்னதாக காபிரியேல் தூதன் அவள் முன் தோன்றி ஒரு தெய்வீக வல்லமையின் அற்புத்த்தினால் அவள் மேசியாவின் தாயார் ஆகுவாள் என்று அறிவித்தான் (லுக்கா 1.26-56, 2.1-52, மத்தேயு 1,2ம் அதி.) இயேசு ஊழியம் செய்த நாட்களில் மரியாள் சம்பந்தப்பட்ட சம்பவங்கள், கலிலேயாவிலுள்ள கானாவூரில் நடைபெற்ற கல்யாணமும் (யோவான் 2.1-11) நாசரேத்தூரில் அழைக்கும்படி வந்ததும் மட்டுமே என்று பார்க்கிறோம். யோவான் சுவிசேஷத்தின் படி, மரியாள் நமது இரட்சகரைத் தொடர்ந்து கல்வாரிக்குச் சென்று, சிலுவையின் அருகே நின்றாள். தன் மகன் சிலுவையில் அறையப்படுவதைப் பார்த்தாள். இயேசு தமது தாயாரும் தமக்கு அன்பாயிருந்த சீஷனும் சிலுவையின் அருகில் இருப்பதைப் பார்த்து, தமது தாயாரை நோக்கி, “ஸ்திருயே அதோ உன் மகன்’’ என்றும் சீஷனைப் பார்த்து, ”அதோ உன் தாய்” என்றும் கூறினார். அந்த நேரம் முதல் அந்த சீஷன் அவளைத் தன்ளிடமாய் ஏற்றுக கொண்டு தன் வீட்டிற்கு அழைத்துச் சென்றாள். முதல் 3 சுவிசேஷங்களிலும் மரியாளை இயேசுவின் சிலுவைக் காட்சியுடன் சம்பந்தப் படுத்தி எதுவும் கூறவில்லை. ஆனால் இயேசு பரத்துக்கேறிய பின்பு அந்த மேல் வீட்டறையில் மரியாளும் சீஷர்களுடன் இருந்தாள் என்பதை அறிகிறோம். (அப்.1.4). இதற்குப் பின் மரியாளைப் பற்றி நமக்கு எதுவும் தெரியவில்லை. மற்ற சுவிசேஷங்களையும் நாம் நுட்பமாக ஆராய்ந்து பார்ப்போம்.

·         அவள் பரிசுத்த ஆவியினால் கர்ப்பவதியானாள் (மத்.1.18). ஏரோது ராஜா ஆட்சி செய்த போது அவள் பிரசவித்தாள் (மத்.2.1).
·         இந்தப் பரிசுத்த குடும்பத்தினர் நாசரேத்தில் வசித்தார்கள் (மத்.2.23).
·         ஏரோது ராஜாவின் பொறாமை, கோபத்துக்குத் தப்பி யோசேப்புடனும் இயேசுவுடனும் எகிப்துக்குச் சென்றாள்.
·         மரியாள் தனக்கு இனத்தாளான எலிசபெத்தைக் காணச் சென்றது பற்றி லூக்கா எழுதுகிறான். “ஸ்திரீகளுக்குள்ளே நீ ஆசீர்வதிக்கப்பட்டவள்” என்றும், “என் ஆண்டவருடைய தாயார்” என்றும் சொல்லி எலிசபெத்து மரியாளை வாழ்த்தினாள் (1.42) என்றும் சொல்லி எலிசபெத்து மரியாளை வாழ்த்தினாள் (1.42).
·         மரியாளின் இந்த துதிபாடல் யாவதும் நன்கறிந்ததாக இருக்கிறது.
·         இயேசுவுக்கு 12 வயதானபோது தேவாலயத்தில் இயேசுவைப் பார்த்து, “மகனே ஏன் எங்களுக்கு இப்படிச் செய்தாய்? இதோ உன் தகப்பனும் நானும் விசாரத்தோடே உன்னைத் தேடினோமே என்று (லூக்கா 2.48) கேட்டதை வாசிக்கிறோம். இதற்கு இயேசு கூறிய பதில், “நீங்கள் ஏன் என்னைத் தேடினீர்கள்? என் பிதாவுக்கடுத்தவைகளில் நான் இருக்க வேண்டியதென்று அறியீர்களா? என்பதே (லூக்.2.49). இயேசு கூறியதை அவர்கள் புரிந்து கொள்ள முடியா விட்டாலும், “அவருடைய தாயார் இந்த சங்கதிகளையெல்லாம் தன் இருதயத்திலே வைத்துக் கொண்டாள் (லூக்கா 2.51).

2.     பலமும் சாதனைகளும்
a.     முதலாவது, நமது ஆண்டவரின் தாயாக இருக்கும் படி தனக்குக் கொடுக்கப்பட்ட அழைப்பைக் குறித்து அவள் நிச்சயமில்லாதிருந்த போதிலும, “உமது வார்த்தையின் படியே ஆகக் கடவது என்று கூறித் தன்னையே ஒப்புக் கொடுத்தாள். ஒரு நபர் தன்னையே ஒப்புக் கொடுத்தாலொழிய தேவனுடைய விருப்பத்தைப் பூர்த்தி செய்வது கூடாததாக இருக்கிறது. இது அவளுடைய பதிலும் தேவனுக்கென்று தன்னையே ஒப்புக் கொடுத்தலுமாக இருக்கிறது.
b.    சபைகளில் யாவரும் அறிந்து, விரும்பிப் பாடும் பாடல்களில் மரியாளின் கீதமும் ஒன்றாக இருக்கிறது. அவள் தன் ஆண்டவரை மகிமைப் படுத்தினாள். (லூக்கா 1.46-55) அதுவே அவளுடைய அழைப்பு. தேவ குமாரனை இந்த உலகத்திற்கு மனிதனாகக் கொடுக்க வேண்டியவளாக இருந்தாள்.
c.     மரியாள் இந்தச் சங்கதிகளையெல்லாம் தன் இருதயத்திலே வைத்து சிந்தனை பண்ணினாள் (லூக்கா 2.19). இயேசுவுக்கும் பெற்றோராக இருப்பதின் முக்கியத்துவத்தை அவர்கள் அறிந்து கொள்ளவில்லை. அத்துடன் இயேசுவின் ஊழியம் எதனுடன் சம்பந்தப்பட்டது என்பதையும் அவர்கள் அறியவில்லை (லூக்கா 2.49-51). இருந்த போதிலும் யோசேப்பும் மரியாளும் இயேசு தேவனுடைய குமாரன் என்பதை அறிந்திருந்தார்கள். இயேசுவின் மனதிலுள்ள சிந்தனையை அவர்கள் அறியவில்லை. அவர் ஒப்பற்ற தனிச் சிறப்புடையவர் என்பதை ஒப்புக் கொண்டார்கள். அவருடன் ஒத்துழைத்துக் கீழ்ப்படிந்தார்கள்.
d.    யார் இயேசுவுக்குத் தாயாரும் சகோதர்ருமாகக் கூடும் (மத்.12.48). “பரலோகத்திலிருக்கிற என் பிதாவின் சித்தத்தின்படி செய்கிறவன் எவனோ, அவனே எனக்குச் சகோதரனும், சகோதரியும், தாயுமாய் இருக்கிறார்கள்.” என்று இயேசு கூறினார். தேவனுடைய சித்தத்தின்படி செய்கிற அனைவரும் நமக்குச் சகோதர்ரும் சகோதரிகளும், தாயாராகவும இருக்கிறார்கள்.
e.     மனுக்குலத்திற்குத் தமது இரட்சிப்பைக் கொண்டு வருவதற்கு தேவன் நாசரேத்திலுள்ள ஒரு சாதாரணமான பெண்ணைத் தமக்குப் பிரதிநிதியாகத் (கருவியாக) தெரிந்தெடுத்தார். மீட்பின் திட்டத்தில் அவளுக்கு ஒரு தனிப்பட்ட பங்காளித்துவம் இருந்தது. விசுவாசிகள் அனைவருமே தேவனுடைய பங்காளிகளாக (உடன் வேலையாட்களாக) இருக்கும்படி அழைக்கப்படுகிறார்கள். தான் தேவனுக்குக் கிடைக்கக் கூடியவளாக இருக்க விரும்பினாள்.
f.     பழைய ஏற்பாட்டு வேத வசனங்களை நன்கு அறிந்து அவற்றை உபயோகப் படுத்தினாள்.

3.     அவளுடைய வாழ்க்கையிலிருந்து நாம் கற்றுக் கொள்ளும் பாடங்கள்
a.     சாதாரண மக்களாக, தேவனுக்குக் கிடைக்கத் தக்கதாக தயாராக இருப்பவர்களே, தேவனுடைய சிறந்த ஊழியக்காரர் ஆவர்.
b.    தேவனுடைய திட்டம், சாதாரண மக்களின் வாழ்க்கையில் அசாதாரணமான சம்பவங்களைக் கொண்டதாக இருக்கிறது.
c.     எதிர்பாராத சம்பவங்களின் போது ஒரு மனிதன் நடந்து கொள்ளும் (அல்லது செயல்படும்) விதமே அவனுடைய உண்மையான குணத்தை வெளிப்படுத்துகிறது.

4.     வேத வசன ஆதாரங்கள்
a.     மரியாளின் சரித்திரம் சுவிசேஷங்களில் பல இடங்களில் சொல்லப்பட்டிருக்கிறது.
b.    அப்.1.14உம் இவள் குறிப்பிடப் பட்டிருக்கிறாள்.

5.     விவாதிப்பதற்கான கேள்விகள்.
a.     எல்லாப் பெண்களைக் காட்டிலும் மரியாள் மேலானவள் என்று ஏன் சொல்லப்படுகிறாள்?
b.    இயேசுவுக்காக அவள் செய்த தியாகத்தைக் குறிப்பிடு.
c.     மரியாளின் கீதத்தின் முக்கிய அம்சங்களைக் குறிப்பிடு.
d.    யார் இயேசுவின் சகோதரரும் தாயாருமாகக் கூடும்? (மத்.12.48).
e.     இவளுடைய வாழ்க்கையிலிருந்து நாம் என்ன கற்றுக் கொள்கிறோம்?

மொழிபெயர்ப்பு
திருமதி டஃப்னி ஜோசப்
பரி.பவுல் ஆலயம், பெட்டாலிங் ஜெயா

108. மரியாள்


சின்ன யாக்கோபின் தயார் (மாற்கு)

முக்கிய வசனம்
மேலும், இயேசுவுக்கு ஊழியஞ்செய்யும்படி கலிலேயாவிலிருந்து அவரோடே வந்திருந்த அநேக ஸ்திரீகள் அங்கே தூரத்திலே நின்று பார்த்துக்கொண்டிருந்தார்கள். அவர்களுக்குள்ளே மகதலேனா மரியாளும், யாக்கோபுக்கும் யோசேக்கும் தாயாகிய மரியாளும், செபெதேயுவின் குமாரருடைய தாயும் இருந்தார்கள். (மத்தேயு 27.55,56)

சுருக்கமான குறிப்புகள்
·         இயேசுவின் சீஷர்கள் மிகுந்த தைரியமும் உண்மையுமானவர்களில் ஒருவர்
·         இயேசுவின் உயிர்த்தெழுதலை நேரில் கண்டறிந்த சாட்சிகளில் இவளும் ஒருவர்
·         இயேசுவின் சிலுவையின் அடிவாரத்தில நின்றாள்.
·         இயேசுவுக்கு ஊரியம் செய்யும்படி தன்னுடைய மகனான சின்ன யாக்கபையும் இவள் ஊக்குவித்தாள்.


1.     முகவுரை – இவளுடைய சரித்திரம்
கலிலேயாவிலிருந்து இயேசுவைப் பின் தொடர்ந்து வந்து, அவர் சிலுவையில் அறையப்பட்ட போதும் அருகிலிருந்த பெண்களுள், சின்ன யாக்கோபுக்கும் யோசேப்புக்கும் தாயான மரியாளும் ஒருவளாக இருந்தாள் என்பதை 3 சுவிசேஷங்களிலுமிருந்து அறிந்து கொள்ளுகிறோம். (மத்.27.56, மாற்கு 15.40, லூக்.24.10) யோவான் 19.25ல் இந்த மரியாளே கிலெயோப்பா மரியாள் என்று அழைக்கப் படுகிறாள் என்பது தெரிகிறது. கிலெயோப்பா, அல்பேயு இந்த இரண்டும் ஒருவரையே குறிக்குமானால், மத்தேயு 10.3ல் வாசிப்பது போல் சின்ன யாக்கோபும் ஒரு சீஷன் (மாற்கு 3.18, லூக்கா 6.15, அப்.1.13) யோவான் எழுதியிருக்கிற பிரகாரம், தன்னுடைய தாயும், தன் தாயாரின் சகோதரியும், கிலெயோப்பாவின் மனைவியான மரியாளும், மகதலேனா மரியாளும் சிலுவையின் அருகே நின்று கொண்டிருந்தார்கள் (யோவான் 19.25) இந்த மூவரில் ஒருவர் கிலெயோப்பாவின் மனைவியாகிய மரியாள். அப்படியானால் யாக்கோபின் தாயாகிய மரியாளுக்கு, மரியாள் என்று அழைக்கப்பட்ட ஒரு சகோதரி இருந்தாள். இவள் அல்பேயுவின் மனைவியும், இயேசுவுக்கு ஒன்றுவிட்ட சகோதரர்களான அப்போஸ்தலனாகிய யாக்கோபு, யோசேயின் தாயார். ஆனால் யாக்கோபு, யோசே (யோசேப்பு) இவர்களுடைய பெயர், இயேசுவின் சகோதர்ர்களின் பெயர்களுடன் எழுதப்பட்டிருக்கிறது (மத்தேயு 13.55, மத்தேயு 6.3, கலாத்.1.19, யூதா.1).

2.     இவளுடைய வாழ்க்கையிலிருந்து நாம் கற்றுக் கொள்ளும் பாடங்கள்.
a.     சீஷர்ளைப் போல் இவள் பிரசித்தி பெற்றவளாக இல்லாத போதிலும், ‘இவள் செய்தது மிகச் சிறிதான எதுவாக இருந்தாலும்’ தேவனுடைய ராஜ்யத்தில் பெரிதாக இருக்கும். இயேசு கைது செய்யப்பட்டபோது, ஒரு வாலிபன் தன் துப்பட்டியைப் போட்டுவிட்டு ஓடின் போனான் (மாற்கு 14.51-52) என்று சொல்ப்பட்டிருக்கிறது. அவன் ஒரு அப்போஸ்தலன் அல்லன். இவன் யோவான் மாற்குவாக இருக்கலாம். பேதுரு இயேசுவை மறுதலித்தான். ஆனால் சின்ன யாக்கோபின் தாயாகிய மரியாள் அங்கே இயேசுவின் சிலுவையண்டையில் நின்றாள்.
b.    தன் மகனான சின்ன யாக்கோபின் மூலமாகவும் இவள் கிறிஸ்துவின் ஊழியத்தில் பங்காற்றினாள்.

3.     வேத வசன ஆதாரங்கள்
a.     மத்.27,56, மாற்கு 15.40, லூக்கா 24.10
b.    யோவான் 19.25, மத்.10.3, மாற்கு 3.18, லுக்.6.15, அப்.1.13

4.     விவாதத்துக்கான கேள்விகள்
a.     இவள் எங்கிருந்து வந்தவள்?
b.    சிலுவையின் அடிவாரத்தில் இவள் என்ன செய்து கொண்டிருந்தாள்?
c.     இயேசுவின் உயிர்த்தெழுதலுக்கு இவள் எவ்வாறு சாட்சி பகர்ந்தாள்?
d.    வேதாகமத்திலுள்ள தைரியசாலிகளான பெண்களில் இவளும் ஒருவள் என்பதை நீ ஒப்புக் கொள்ளுகிறாயா?
e.     இயேசுவின் உயிர்த்தெழுதலுக்கு சாட்சி பகர்வதில் உன்னுடைய பங்கு என்ன?

மொழிபெயர்ப்பு
திருமதி டஃப்னி ஜோசப்
பரி.பவுல் ஆலயம், பெட்டாலிங் ஜெயா

107. மகதலேனா மரியாள் –


இயேசுவுக்குப் பின் சென்ற பெண் சீஷரில் ஒருவர்

முக்கிய வசனம்
அவர் பொல்லாத ஆவிகளையும் வியாதிகளையும் நீக்கிக் குணமாக்கின சில ஸ்திரீகளும், ஏழு பிசாசுகள் நீங்கின மகதலேனாள் என்னப்பட்ட மரியாளும் அவரோடே இருந்தாள்.  (லூக்கா 8.2)

சுருக்கமான குறிப்புகள்
  • ·         கலிலேயரின் பட்டணமான மகதலாவிலிருந்து வந்தவள்.
  • ·         அசுத்த ஆவிகளால் பிடிக்கப்பட்டதிலிருந்து குணப்படுத்தப்பட்டாள் (லூக்கா 8.2).
  • ·         ஊழியத்தில் இவள் ஒரு பங்காளி. உயிர்த்தெழுந்த இயேசுவை முதலாவதாகப் பார்த்த சாட்சி. இவள் இயேசுவின் கல்லறையில் இரண்டு தூதர்களையும் பார்த்தாள்.
  • ·         அப்போஸ்தலருக்கு அப்போஸ்தலன் என்று ஒருவர் இவளை அழைத்தார்.
  • ·         இவள் பெத்தானியாவிலிருந்து வந்தவள்.



1.     முகவுரை – இவளுடைய சரித்திரம்
மகதலேனாள் என்னப்பட்ட மரியாள் கலிலேயாவிலுள்ள மகதலே என்ற பட்டணத்தில் வசித்து வந்தாள். இவளிடமிருந்து 7 பிசாசுகள் இயேசு விரட்டி குணமாக்கினார் (லூக்கா 16.9, லூக்.8.2) கலிலேயாவிலிருந்து எருசலேமுக்கு இயேசு செய்த கடைசி பயணத்தில் இவளும் கூடச் சென்றாள். இயேசு சிலுவையில் அறையப்படுவதையும் அருகில் நின்று பார்த்தாள் (மத்.27.56, மாற்கு 15.40, லூக்கா. 23.49, யோவான் 19.25). இயேசவின் சரீரம் கல்லறையில் அடக்கம்  செய்யப்படுவதையும் பார்த்தாள் (மத்.27.61, மாற்கு 15.47, லூக்கா 23.55). ஓய்வு நாள் முடிந்த பின் இயேசுவின் சரீரத்திற்கு சுகந்த வர்க்கமிடுவதற்குத் தேவையானவற்றை வாங்கி ஆயத்தம் செய்யும் படி அவள் எருசலேமுக்குத் திரும்பிச் சென்றாள். ஓய்வு நாள் முழுவதும் அங்கேயே காத்திருந்து, வாரத்தின் முதல் நாள் அதிகாலையிலே கல்லறையினிடத்திற்குச் சென்று, கல்லறை வெறுமையாயிருப்பதைக் கண்டாள். அத்துடன், “அவர் உயிர்த்தெழுந்தார்” என்று தூதன் கூறிய செய்தியையும் பெற்றுக் கொண்டாள் (மத்.28.1-10, மாற்கு 16.1-10, லூக்கா 24.1-10, யோவான் 20.1-2, 11-18) லூக்கா 7.36-50ல் பாவியான ஒரு ஸ்திரீயைப் பற்றிய சம்பவத்துக்குப் பின்னாக அதைத் தொடர்ந்து 8.2ல் ‘7 பிசாசுகள் நீங்கின மகதலேனாள் என்னப்பட்ட மரியாளும்’ என்று இவளைப் பற்றி முதல் முறையாகக் கூறப்பட்டிருக்கிறது. ஆனால் அந்த 2 ஸ்திரீகளையும் சம்பந்தப்படுத்துவதற்கு எந்தக் காரணமும் இல்லை. இதைப் போலவே, யோவான் 12.3ல் பஸ்கா பண்டிகை வர 6 நாட்களுக்கு முன் இயேசுவின் பாதங்களில் பரிமளத் தைலம் பூசிய பெத்தானியாவைச் சேர்ந்த மரியாளையும் முன்பு லூக்கா 7ம் அதிகாரத்தில் நாம் வாசித்த மரியாளையும் சம்பந்தப்படுத்த முடியாது.

2.     இவளுடைய வாழ்க்கையிலிருந்து நாம் கற்றுக் கொள்ளும் பாடங்கள்
a.     தான் குணமடைந்தபின் தன்னுடைய வாழ்க்கையை இயேசுவின் ஊழியத்திற்கு ஒப்புக் கொடுத்தாள். (குணமடையும் எல்லாரும் கிறிஸ்துவை விசுவாசிப்பதில்லை, அல்லது தங்கள் ஜீவியத்தைக் கிறிஸ்துவுக்கு சேவை செய்ய ஒப்புக் கொடுப்பதில்லை).
b.    சீஷர்களின் கூட்டத்தோடு சேர்ந்து கொண்டு இயேசு போகுமிடமெல்லாம் அவருக்குப் பின் சென்றாள். (லூக்.8.2)
c.     சீஷர்களின் கூட்டத்தோடு சேர்ந்து கொண்டு இயேசு போகுமிடமெல்லாம் அவருக்குப் பின் சென்றாள். (லூக்.8.2).
d.    சீஷர்களான ஆண்கள் யாவரும் இயேசுவை விட்டு ஓடிப் போன பின்பும் இவள் சிலுவையின் அடிவாரத்தில் நின்றாள் (மாற்கு 15.40, யோவான் 19.25). இயேசுவின் சரீரம் அடக்கம் பண்ணப்படுவதையும் பார்த்தாள் (மாற்கு 15.47). இயேசுவின் உயிர்த்தெழுதலுக்குப் பின் நடைபெற்ற சம்பவங்களையும் இவள் நேரில் கண்டாள்.
e.     இயேசு உயிர்த்தெழுந்தார் என்பதை முதலாவதாக சீஷர்களுக்கு அறிவித்த ஸ்திரீகளில் இவளும் ஒருவள். மற்ற ஸ்திரீகள் சென்று விட்ட பின்பும் அங்கேயே அழுது கொண்டு நின்ற இவள், உயிர்த்தெழுந்த இயேசுவை முதலாவது பார்த்தாள் (யோவன் 20.1-2, 11-18). தம்மைத் தொடுவதற்கு அவளை இயேசு அனுமதிக்கவில்லை (யோவன் 20.17).

3.     வேத வசன ஆதாரங்கள்
a.     மாற்கு 16.9, லூக்கா 8.2
b.    மத்தேயு 27.56, லூக்கா 8.2, மாற்கு 15.40, லூக்கா 23.49, யோவான் 19.25
c.     மத்தேயு 28.1-10, மாற்கு 16.1-8, லூக்கா 24.110, யோவான் 20.1-2, 11-18

4.     விவாதிக்க வேண்டிய கேள்விகள்
a.     இவள் எங்கிருந்து வந்தவள்?
b.    இயேசு இவளுக்கு எப்படி ஊழியம் செய்தார்?
c.     இவள் ஒரு தைரியமும் உண்மையுமான பெண்ணாக இயேசுவைப் பின் தொடர்ந்தாள். இதற்குக் காரணங்கள் என்ன?
d.    இயேசு உயிர்த்தெழுந்தார் என்பதை வெறுமையான கல்லறையில் கண்ட பெண்களில் இயேசுவை முதலாவதாகப் பார்த்த பெண் யார்?


மொழிபெயர்ப்பு
திருமதி டஃப்னி ஜோசப்
பரி.பவுல் ஆலயம், பெட்டாலிங் ஜெயா

Monday, March 12, 2012

105. மாற்கு யோவான் –


 இரண்டாவது சுவிசேஷத்தை எஏதியவர்

முக்கிய வசனம்
லூக்காமாத்திரம் என்னோடே இருக்கிறான். மாற்குவை உன்னோடே கூட்டிக்கொண்டுவா; ஊழியத்தில் அவன் எனக்குப் பிரயோஜனமுள்ளவன்.  (2 தீமோ.4.11)

சுருக்கமான குறிப்புகள்
·         மாற்கு சுவிசேஷத்தை மாற்கு எழுதினான்.
·         இவன் பர்னபாவிற்கு இனத்தான். முதல் சுவிசேஷ ஊழியனான பர்னபாவுக்கு ஊழியத்தில் பங்காளி. (அப்.13.13, 15.36-41, கொலோ.4.10)
·         மாற்கு தான் ஒரு நல்ல உதவியாளரும், நண்பனும், நம்பிக்கைக்குரிய தலைவனும் என்று நிருபித்தான். (கெலோ.4.10, பிலேமோன்)
·         மாற்குவின் ஊழியம் முதலாவது பவுலுக்குத் திருப்திகரமாக இல்லை. ஆனால் பின்னர், அவன் உபயோகமானவன் என்பதை அறிந்து கொண்டான். (2தீமோ.4.11)

1.     முகவுரை – அவனுடைய சரித்திரம்
சுவிசேஷ ஊழியனும் யூதனுமான மாற்கு, தனக்கு ஒரு ரோமப் பெயரையும் சேர்த்து, ‘மாற்கு என்னும் பெயர் கொண்ட யோவான்’ என்று குறிப்பிடப் பட்டிருக்கிறான். (அப்.12.12, 25) பர்னபாவிற்கு இனத்தான் (கொலோ.4.10). எருசலேமில் வசித்த மரியாளின் மகன் (அப்.12.12) பேதுருவின் ஊழியத்தின் மூலமாக மாற்கு கிறிஸ்தவ மதத்திற்கு மாறியிருக்கலாம். ஏனென்றால் (1 பேதுரு 5.13) பேதுரு அடிக்கடி மாற்குவின் தாயாரின் வீட்டிற்கு வருவதுண்டு (அப்.12.12). எருசலேமிலிருந்து பவுலும் பர்னபாவும் அந்தியோகியாவுக்குச் சென்ற போது மாற்குவும் அவர்களுடன் சென்று அவர்களின் சுவிசேஷப் பயணத்தில் சேர்ந்து கொண்டான். ஆனால் இடையில் மாற்கு அவர்களை விட்டுப் பிரிந்து சென்று விட்டான் (அப்.13.1, 13). இதன் காரணமாகப் பவுல் அதற்கடுத்த பயணத்தில் மாற்குவைக் கூட அழைத்துச் செல்ல மறுத்து விட்டான். சுமார் 6 ஆண்டுகளுக்குப் பின்பு பர்னபாவுடன் மாற்கு, சீப்புரு புரியில் கைதியாக இருந்த சமயம், மாற்கு அவனுக்கு உதவியாளராகப் பட்டுள்ளது (கொலோ.4.10, 2 தீமோ.4.11, பிலேமோன் 24) பேதுருவின் ஊழிய காலத்தில் இவன் பேதுருவுக்கு உதவியாக, அவருடைய நட்பைப் பெற்று அவருக்கு மொழி பெயர்ப்பவராகவோ அல்லது காரியதரிசியாகவோ பேதுருவோடிருந்த்தாக ஆதி கிறிஸ்தவ எழுத்தாளர்கள் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். இவன் மேலும் ஊழியஞ் செய்து, கடைசியாக எகிப்தில் இரத்தச் சாட்சியாக மரித்தான்.

மாற்குவுடன் சம்பந்தப்பட்ட சில சிறப்பான தகவல்கள் உள்ளன. அப்.12.12ல் குறிப்பிடப்பட்டுள்ள வீட்டிற்கு (மாற்குவின் தகப்பனார் காலத்தில்) இயேசு நமது சீஷர்களுடன் கடைசியாகப் பஸ்காவைப் புசித்தார் என்றும் (மாற்கு 14.14) கெத்செமெனே தோட்டம் அந்த வீட்டுடன் சேர்ந்தது என்றும், 14,13ல் தண்ணீர் குடம் கொண்டு வந்த அந்த மனிதன் மாற்கு என்றும் எண்ணப் படுகிறது. மாற்கு சுவிசேஷத்தில் மட்டுமே ஒரு வாலிபனைப் பற்றிக் குறிப்பிடப் பட்டுள்ளது (14, 51,52).


2.       மாற்கு சுவிசேஷத்தின் விசேஷித்த அம்சங்கள்
மற்ற சுவிசேஷங்களைப் போல் இதில் மத சாஸ்திரம் அல்லது பிற நோக்கங்களுக்குச் சிறப்பான இடமளிக்காமல், முக்கியமாக, இயேசு செய்த அதிசயமான செயல்கள் வரிசைக் கிரமமாக எடுத்துக் கூறப்பட்டிருக்கின்றன. இங்குக் காண்பிக்கப்பட்டிருக்கும் இயேசுவின் வாழ்க்கை, செயல்கள் நிரம்பினதாகவும், அளவற்ற அவருடைய வல்லமை, சோர்வடையாத சக்தி, வற்றாத கிருபையைத் தெரிவிக்கிறதாகவும் இருக்கிறது. சம்பவங்களின் காலமும் இடமும் திட்டவட்டமாகக் கொடுக்கப்பட்டிருக்கிறது. பேதுருவுடன் மாற்குவுக்கு உள்ள தொடர்பின் காரணமாக இவன் எழுதிய வரலாறு சந்தர்ப்ப சூழ்நிலையின் படி விரிவாகக் கூறப்பட்டிருக்கிறது.பேதுருவைக் குறித்து மாற்கு எழுதிய சில விஷயங்கள் மற்ற சுவிசேஷங்களில் எழுதப்படாமலும் (11.21, 13.3) மற்றவர்கள் பேதுருவைப் பற்றி எழுதிய சில குறிப்புகள் மாற்குவினால் எழுதப்படாமலும் இருக்கின்றன. ஒரு வேளை மாற்குவிற்கு அது பேதுருவின் வாழ்க்கை வரலாறு போல் தோன்றியிருக்கலாம். ஆனால் இங்கு தேவையானவர் இயேசு மட்டுமே, மாற்கு அல்லது பேதுரு அல்ல.

3.       மாற்குவின் குடும்பத்தைப் பற்றிய சில அம்சங்கள்
மாற்குவின் குடும்பத்தினர் ஆரம்ப காலத்திலுள்ள சுவிசேஷ ஊழியத்தில் நெருக்கமாக ஈடுபட்டிருந்தனர் (அப்.4.36). இவனுடைய தாயாகிய மரியாள் சமூகத்தில் நல்ல நிலைமையில், ஆஸ்தியுடையவராகவும் ஒரு கிறிஸ்தவளாகவும் இருந்தாள். துன்புறுத்துதல் மிகுதியாக இருந்த சமயத்திலும் கூட இவளுடைய வீடு ஆதித் திருச்சபை கூடுகிற இடமாக உபயோகிக்கப் பட்டது (அப்.12.12). இயேசுவைக் கைதுசெய்த போது ஓடிப்போன வாலிபன் இந்த மாற்குதான் (மாற்கு 14.51).

புத்தகத்தை எழுதுபவர் அவரும் தன்னுடைய பெயரைக் குறிப்பிடுவது வழக்கமல்ல (யோவான் 21.24). மாற்கு 14ல் கூறப்பட்டுள்ள கடைசியான பஸ்கா விருந்து மாற்குவின் வீட்டில்தான் புசிக்கப்பட்டது என்றும் 21.14ல் குறிப்பிடப்பட்டுள்ள வீட்டு எஜமான் மாற்குவின் தகப்பன் என்றும் சொல்லப்படுகிறது. அப்போது அவர் உயிருடன் இருந்தார் என்றும் சொல்லப்படுகிறது. அப்போது அவர் உயிருடன் இருந்தார் என்றும் அப்.12.12ன் தேதிக்கு முன்னதாக இறந்து விட்டதாகவும் தெரிய வருகிறது. சுவிசேஷப் பயணத்திலிருந்து மாற்கு விலகிக் கொண்டபோது (அப்.13.13) பர்னபாவும் பவுலும் தனித்தனியே சென்றனர். மாற்கு தன்னை விட்டு விலகிப் போனதாகப் பவுல் நினைத்தான். எனவே, இரண்டாவது சுவிசேஷப் பயணத்தில் மாற்குவைத் தங்களுடன் அழைத்துச் செல்ல பர்னபா விரும்பிய போது பவுல் இதற்கு மறுத்து விட்டான் (அப்.15.38). எனவே, மாற்குவைத் தன்னுடன் அழைத்துக் கொண்டு பர்னபா சீப்புரு தீவுக்குச் சென்றான். பவுல் சீலாவைக் கூட்டிக் கொண்டு போனான். சில காலத்திற்குப் பின் பவுல் மாற்குவை மன்னித்துத் தனக்கு உதவியாளராக ஏற்றுக் கொண்டான்.

4.       மாற்குவைப் பற்றிய இதர விஷயங்கள்
இவன் இயேசுவின் 12 சீஷர்களில் ஒருவனல்ல. ஆனால் பவுலின் முதலாவது சுவிசேஷப் பயணத்தில் பவுலுடன் சென்றான். மாற்கு தனது சுவிசேஷத்தை ரோமாபுரியிலுள்ள கிறிஸ்தவர்களுக்காக கி.பி.55-65க்கும் இடையே எழுதினான். மாற்கு சவிசேஷமே முதலாவது எழுதப்பட்ட சுவிசேஷம். மத்தேயுவும் லூக்காவும் தாங்கள் எழுதிய சமயத்தில் மாற்கு எழுதிய சுவிசேஷத்தைத் தங்களுக்கு முன் வைத்து, அதிலுள்ளவற்றின் அதிகமான பகுதியைத் தங்கள் சுவிசேஷத்தில் இணைத்து எழுதினார்கள் என்று பொதுவாக ஒப்புக் கொள்ளப்படுகிறது. மாற்கு சுவிசேஷத்தின் 31 வசனங்களைத் தவிர மற்ற எல்லாவற்றையும் மத்தேயு, லூக்கா தங்கள் சுவிசேஷங்களில் எடுத்தெழுதியிருக்கின்றனர். இயேசுவையும், அவருடைய வேலை, போதனைகளையும் மற்றவர் முன் எடுத்துக் காட்டுவதே மாற்குவின் நோக்கம்.

5.       சுவிஷத்தின் முக்கியமான கருத்துகள்
1.     இயேசு கிறிஸ்து – இயேசு கிறிஸ்து ஒருவரே தேவனுடைய குமாரன்.
2.     ஊழியக்காரன் – மாற்கு 10.45 – மேசியாவாக இந்த பூமிக்கு வந்ததின் மூலமாகப் பழைய ஏற்பாட்டுத் தீர்க்கதரிசனங்களை இயேசு நிறைவேற்றினார். ஜெயம் கொள்ளும் அரசனாக அவர் வரவில்லை. அவர் ஓர் ஊழியக்காரனாக வந்தார்.
3.     அற்புதங்கள் – இயேசுவின் பிரசங்கங்களைக் காட்டிலும் அதிகமாக, மாற்கு அற்புதங்களைக் குறிப்பிட்டு எழுதியிருக்கிறான். இயேசு நிச்சயமாகவே வல்லமையும் செயல்களுமுள்ள மனிதர். வெறும் வார்த்தைகளை மட்டும் பேசுபவரல்ல. தாம் யார் என்பதை மக்கள் நம்பும் படியாகவும், தேவனாகத் தம்முடைய உண்மையான அடையாளத்தை சீஷர்கள் அறிந்து கொள்ளும் படிக்கும் இயேசு அற்புதங்களைச் செய்தார்.
4.     சுவிசேஷத்தைப் பரவச் செய்தல் – இயேசு தமது ஊழியத்தை முதலாவது யூதர்கள் மத்தியில் செய்தார். யூதத் தலைவர்கள் அவரை எதிர்த்த போது இயேசு யூதரல்லாதோர் மத்தியில் சென்று பிரசங்கித்து வியாதியஸ்தரைச் சொஸ்தமாக்கினார். அநேகர் இயேசுவில் விசுவாசம் வைத்து அவரைப் பின் பற்றினர். இயேசு சீஷர்களுக்குக் கொடுத்த கடைசியான செய்தி, அவர்கள் உலகத்திற்குள் சென்று இரட்சிப்பின் சுவிசேஷத்தைப் பிரசங்கிக்க வேண்டுமென்று அவர்களுக்குச் சவால் விடுத்தது.


6.       விவாதிக்க வேண்டிய கேள்விகள்
1.     மாற்கு சுவிசேஷத்தை எழுதுவதற்கு யோவான் மாற்குவிற்கு யார் உதவி செய்திருக்கக் கூடும்?
2.     மாற்கு பர்னபாவிற்கு எந்த உறவு முறையில் இனத்தான்?
3.     பவுல் தனது முதலாவது சுவிசேஷப் பயணத்திற்குப் பின் மாற்குவைப் பற்றி முதலில் ஏன் அதிருப்தியாயிருந்தான்?
4.     மாற்குவுக்குச் சாதகமாகப் பவுல் என்ன கூறினான்? (2தீமோ.4.11)
5.     யோவான் மாற்குவின் ஜீவியத்திலிருந்து நாம் என்ன கற்றுக் கொள்ளக் கூடும்?


மொழிபெயர்ப்பு
திருமதி டஃப்னி ஜோசப்
பரி.பவுல் ஆலயம், பெட்டாலிங் ஜெயா