Bishop Datuk Dr. S.Batumalai Ph.D

Bishop Datuk Dr. S.Batumalai Ph.D
பேராயர் டத்தோ டாக்டர் எஸ்.பத்துமலை

மேற்கு மலேசிய ஆங்கிலிக்கன் திருச்சபையின் உதவிப் பேராயர் டாக்டர் எஸ்.பத்துமலை

பேராயர் டாக்டர் எஸ்.பத்துமலை நடத்துகிற நீள்விரி இறையியல் கல்விக்கான பாடப் பொருள்களை நான் மொழி பெயர்த்து வருகிறேன். இப்பாடப் பொருள்கள் உலகமெங்கும் வியாபித்துக் கிடக்கிற தமிழ்க் கிறிஸ்த்வர்கள் பயனுள்ளவையாக அமையவேண்டும் என்பதற்காக இந்த வலைமனையில் இவற்றைப் பதிப்பிக்கிறேன்.

Sunday, March 11, 2012

103. யூதா


இயேசு, யாக்கோபின் சகோதரன்,, யூதா நிருபத்தை எழுதியவன்

முக்கிய வசனம்
Jude 1:3 பிரியமானவர்களே, பொதுவான இரட்சிப்பைக்குறித்து உங்களுக்கு எழுதும்படி நான் மிகவும் கருத்துள்ளவனாயிருக்கையில், பரிசுத்தவான்களுக்கு ஒருவிசை ஒப்புக்கொடுக்கப்பட்ட விசுவாசத்திற்காக நீங்கள் தைரியமாய்ப் போராடவேண்டுமென்று உங்களுக்கு எழுதி உணர்த்துவது எனக்கு அவசியமாய்க் கண்டது.  (வ.3)

சுருக்கமான குறிப்புகள்
  • ·         இயேசுவின் சகோதரனாகிய யூதா, தன்னை, “இயேசு கிறிஸ்துவினுடைய ஊழியக்காரனும், யாக்கோபினுடைய சகோரனும் என்று அழைக்கிறான்.
  • ·         மத்.13.55ல் இவன் இயேசுவின் சகோதரருடன் ஒருவனாகக் குறிப்பிடப் பட்டிருக்கிறான்.
  • ·         பொதுவான இரட்சிப்பைக் குறித்து எழுதுவது அவசியம் என்று அறிந்திருந்த போதிலும், எந்த நிலைமையிலும் பரிசுத்தவான்களின் விசுவாசத்தைத் தைரியத்துடன் காத்துக் கொள்ள வேண்டும் என்று அவர்களுக்கு எழுதுவது தனது கடமை என்று நினைத்தான்.
  • ·         நமது தேவனுடைய கிருபையைக் காம விகாரத்துக்கேதுவாகப் புரட்டி, நமது ஒன்றான ஆண்டவராகிய கர்த்தராகிய கிறிஸ்துவை மறுதலிக்கிற கள்ளப் போதகர்களை எதிர்ப்பது அவசியம் என்று கண்டார்.
  • ·         முதலாவது நூற்றாண்டிலிருந்தே பல கட்டுக் கதைகளும் தவறான போதனைகளும் சபையை அச்சுறுத்திக் கொண்டிருந்தன. யூதா இதைக் குறித்து கவனமாக இருக்கிறார்.

முகவுரை – இவனுடைய சரித்திரம்
தீங்கிலிருந்து பாதுகாக்கவும், தாக்குதலின்போது காப்பாற்றவும், சத்துருக்களை எதிர்க்கவும் – பல நூற்றாண்டுகளாகக் காவலாளர்கள் மதில்களைக் கட்டி, ஆயுதங்களை எறிந்து, யுத்தங்கள் புரிந்து தேசங்களையும் பட்டணங்களையும் பாதுகாத்தனர். தனிப்பட்ட மனிதரும் தங்கள் குடும்பங்களுக்காக தைரியமாகப் போராடியிருக்கின்றனர். நமக்கு அருமையானவற்றைப் பாதுகாப்பதற்காக நமது முழு பெலத்தோடும் எதிரிகளைத் தாக்கி உயிர் வாழ முயற்சி செய்வது வாழ்க்கையின் நியதியாக இருக்கிறது.

தேவனுடைய வார்த்தையும், நித்திய ஜீவனாகிய ஈவும் அளவிடப்பட முடியாத முடிவில்லா மதிப்புடையதாகக் கிறிஸ்துவை உண்மையாய்ப் பின்பற்றுகிறவர்களுக்காகக் கொடுக்கப் பட்டிருக்கிறது. தேவனையும் அவரைப் பின்பற்றுகிறவர்களையும் அநேக மக்கள் எதிர்க்கிறார்கள். அவர்கள் தேவனுடைய சத்தியத்தைப் புரட்டி, அஜாக்கிரதையாயிருக்கும் மக்களை வஞ்சித்துக் கெடுக்க விரும்புகிறார்கள். ஆனால், தேவனுக்குத் தங்களை ஒப்புக் கொடுத்திருக்கும் மக்கள், தேவனுடைய சத்தியத்திற்காகப் போராடி அதை எல்லா இடங்களிலும் அறிவிக்க வேண்டும். இந்தக் கட்டளையைப் பெற்றிருப்பது ஒரு முக்கியமான வேலையும், பொறுப்பும், சிலாக்கியமுமாக இருக்கிறது.

இதுவே எங்குமுள்ள கிறிஸ்தவர்களுக்கு யூதா கொடுக்கும் செய்தி. எதிர்ப்பு வரும், தேவபயமற்ற போதகர்கள் எழும்புவார்கள், ஆனால் கிறிஸ்தவர்கள் பொய்யான காரியங்களையும் துன்மார்க்கத்தையும் தவிர்த்து (வ.4-19) தேவன் தமது ஜனத்தை எகிப்திலிருந்து இரட்சித்து, பின் விசுவாசியாதவர்களை அழித்தது (வ.5). அப்போஸ்தலரின் எச்சரிப்பு (வ.17-21). ஆகியவற்றை நினைவு கூர்ந்து, விசுவாசத்திற்காக தைரியமாகப் போராட வேண்டும்.

இந்த நிருபத்தை வாசிப்பவர்கள் ஜெபத்தின் மூலமாகத் தங்கள் விசுவாசத்தை உறுதிப்படுத்தி (வ.20) தேவனுடைய அன்பிலே தங்களைக் காத்துக் கொண்டு (வ21) மற்றவர்களுக்கு உதவி செய்து (22-23) பாவத்தை வெறுத்து (வ.23) ஜீவிக்க வேண்டுமென்று அறிவுறுத்துகிறார். வ.24, 25ல் தேவனுக்குத் துதி செலுத்தி, ஸ்தோத்தரித்து, தமது நிருபத்தை முடிக்கிறார்.

தேவனுடைய வார்த்தையையும் சபை ஐக்கியத்தையும் இயேசு கிறிஸ்துவுக்குக் கீழ்ப்படிதலையும்  எவ்வளவாக மதிக்கிறாய்? கிறிஸ்துவை மையமாகக் கொண்ட உனது வாழ்க்கையையும் தேவனுடைய வார்த்தையின் உண்மையையும் கிறிஸ்துவின் சரீரமாகிய சபையின் ஐக்கியத்தையும் கெடுத்து அழிப்பதற்காகப் பல கள்ளப் போதகர்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள். யூதா நிருபத்தை வாசித்து பாதுகாக்கவும் தீர்மானம் செய்யுங்கள். இதைக் காட்டிலும் விலை மதிப்புள்ளது வேறு எதுவுமில்லை.

2. யூதாவுடைய கருத்தும் அவற்றின் முக்கியத்துவமும்

கள்ளப் போதகர்கள்  – கிறிஸ்துவை ஆண்டவராக ஏற்றுக் கொள்ளாமல், மற்றவர்களின் விசுவாசத்தைத் தரக்குறைவாக நினைக்கும் கள்ளப் போதர்கள் தலைவர்களுக்கு எதிராக எச்சரிக்கிறார்.

முக்கியத்துவம் – கிறிஸ்தவ சத்தியத்தை நாம் தீவிரமாகப் பாதுகாக்க வேண்டும். வேதாகமத்தைத் தங்கள் தேவை, நோக்கங்களுக்குச் சாதகமாகத் திரித்துக் கூறும் தலைவர்களை விட்டு விலக வேண்டும்.

கருத்து - மற்றவர்களை வழிதவறச் செய்யும் தலைவர்கள் தண்டிக்கப் படுவார்கள்



முக்கியத்துவம் – தேவனுடைய உண்மையான ஊழியக்காரர்கள் தங்கள் வார்த்தையிலும் செயலிலும் கிறிஸ்துவையே வெளிக் காட்டுவார்கள்.

விலகிப் போகுதல்
கிறிஸ்துவை விட்டு விலகிப் போகுதல் பற்றியும் யூதா எச்சரிக்கிறான். தமக்கு விரோதமாக எதிர்த்துக் கலகம் செய்வதை தேவன் தண்டிக்கிறார் என்பதை நாம் நினைவு கூர வேண்டும். கிறிஸ்துவோடு நமக்குள்ள உண்மையான ஒப்புரவை விட்டு அலைந்து திரியாதபடி நாம் கவனாக இருக்க வேண்டும்.

முக்கியத்துவம் – தேவனுடைய வார்த்தையிலுள்ள சத்தியத்தை அறிந்து கொள்ள விரும்பாதவர்கள், அவரைவிட்டு வழி விலகிப் போகக் கூடிய சாத்தியமுள்ளவர்களாக இருக்கின்றனர். அப்போஸ்தலரால் பிரசங்கிக்கப் பட்டதும் தேவனுடைய வார்த்தயில் எழுதப்பட்டதுமான சத்தியத்தை விட்டு கவனத்தைச் சிதறடிக்கும் தவறான போதனைகளுக்கு எதிராகக் கிறிஸ்தவர்கள் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும்.

3. இந்த நிருபம் ‘பொதுவான நிருபம்’ என்று எழுதப்பட்டிருப்பதினால் உலகமெங்குமுள்ள திருச்சபைக்கும் இது முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கிறது.

4. இதன் நோக்கம் – இவர் ‘பிரியமானவர்களே, பிதாவாகிய தேவனால் பரிசுத்தமாக்கப் பட்டவர்களும், இயேசு கிறிஸ்துவினால் காக்கப்பட்டவர்களுமாகிய அழைக்கப்பட்டவர்களுக்கு’ என்று தமது நிருபத்தை ஆரம்பிப்பதினால், உலகமெங்குமுள்ள கிறிஸ்தவர்களுக்கும் கிறிஸ்தவ நாடுகளுக்கும் எழுதுகிறார் என்று புலப்படுகிறது.

5. வேத வசன ஆதாரங்கள் – யூதா எழுதிய பொதுவான நிருபம் இதை எழுதியவரைப் பற்றி நாம் அறிந்து கொள்ள உதவி செய்கிறது.

1.     விவாத்த்துக்கான கேள்விகள்
a.     யூதா யார்?
b.    அவர் இயேசுவுக்கு என்ன உறவு?
c.     இந்த நிருபத்தில் அவருடைய முக்கியமான கருத்து என்ன?
d.    இந்த நிருபத்தை அவர் யாருக்கு எழுதினார்?
e.     இயேசு கிறிஸ்துவுடன் சம்பந்தப்பட்ட தற்காலப் பிரச்சனைகள் யாவை?

மொழிபெயர்ப்பு
திருமதி டஃப்னி ஜோசப்
பரி.பவுல் ஆலயம், பெட்டாலிங் ஜெயா

No comments:

Post a Comment