Bishop Datuk Dr. S.Batumalai Ph.D

Bishop Datuk Dr. S.Batumalai Ph.D
பேராயர் டத்தோ டாக்டர் எஸ்.பத்துமலை

மேற்கு மலேசிய ஆங்கிலிக்கன் திருச்சபையின் உதவிப் பேராயர் டாக்டர் எஸ்.பத்துமலை

பேராயர் டாக்டர் எஸ்.பத்துமலை நடத்துகிற நீள்விரி இறையியல் கல்விக்கான பாடப் பொருள்களை நான் மொழி பெயர்த்து வருகிறேன். இப்பாடப் பொருள்கள் உலகமெங்கும் வியாபித்துக் கிடக்கிற தமிழ்க் கிறிஸ்த்வர்கள் பயனுள்ளவையாக அமையவேண்டும் என்பதற்காக இந்த வலைமனையில் இவற்றைப் பதிப்பிக்கிறேன்.

Monday, March 12, 2012

105. மாற்கு யோவான் –


 இரண்டாவது சுவிசேஷத்தை எஏதியவர்

முக்கிய வசனம்
லூக்காமாத்திரம் என்னோடே இருக்கிறான். மாற்குவை உன்னோடே கூட்டிக்கொண்டுவா; ஊழியத்தில் அவன் எனக்குப் பிரயோஜனமுள்ளவன்.  (2 தீமோ.4.11)

சுருக்கமான குறிப்புகள்
·         மாற்கு சுவிசேஷத்தை மாற்கு எழுதினான்.
·         இவன் பர்னபாவிற்கு இனத்தான். முதல் சுவிசேஷ ஊழியனான பர்னபாவுக்கு ஊழியத்தில் பங்காளி. (அப்.13.13, 15.36-41, கொலோ.4.10)
·         மாற்கு தான் ஒரு நல்ல உதவியாளரும், நண்பனும், நம்பிக்கைக்குரிய தலைவனும் என்று நிருபித்தான். (கெலோ.4.10, பிலேமோன்)
·         மாற்குவின் ஊழியம் முதலாவது பவுலுக்குத் திருப்திகரமாக இல்லை. ஆனால் பின்னர், அவன் உபயோகமானவன் என்பதை அறிந்து கொண்டான். (2தீமோ.4.11)

1.     முகவுரை – அவனுடைய சரித்திரம்
சுவிசேஷ ஊழியனும் யூதனுமான மாற்கு, தனக்கு ஒரு ரோமப் பெயரையும் சேர்த்து, ‘மாற்கு என்னும் பெயர் கொண்ட யோவான்’ என்று குறிப்பிடப் பட்டிருக்கிறான். (அப்.12.12, 25) பர்னபாவிற்கு இனத்தான் (கொலோ.4.10). எருசலேமில் வசித்த மரியாளின் மகன் (அப்.12.12) பேதுருவின் ஊழியத்தின் மூலமாக மாற்கு கிறிஸ்தவ மதத்திற்கு மாறியிருக்கலாம். ஏனென்றால் (1 பேதுரு 5.13) பேதுரு அடிக்கடி மாற்குவின் தாயாரின் வீட்டிற்கு வருவதுண்டு (அப்.12.12). எருசலேமிலிருந்து பவுலும் பர்னபாவும் அந்தியோகியாவுக்குச் சென்ற போது மாற்குவும் அவர்களுடன் சென்று அவர்களின் சுவிசேஷப் பயணத்தில் சேர்ந்து கொண்டான். ஆனால் இடையில் மாற்கு அவர்களை விட்டுப் பிரிந்து சென்று விட்டான் (அப்.13.1, 13). இதன் காரணமாகப் பவுல் அதற்கடுத்த பயணத்தில் மாற்குவைக் கூட அழைத்துச் செல்ல மறுத்து விட்டான். சுமார் 6 ஆண்டுகளுக்குப் பின்பு பர்னபாவுடன் மாற்கு, சீப்புரு புரியில் கைதியாக இருந்த சமயம், மாற்கு அவனுக்கு உதவியாளராகப் பட்டுள்ளது (கொலோ.4.10, 2 தீமோ.4.11, பிலேமோன் 24) பேதுருவின் ஊழிய காலத்தில் இவன் பேதுருவுக்கு உதவியாக, அவருடைய நட்பைப் பெற்று அவருக்கு மொழி பெயர்ப்பவராகவோ அல்லது காரியதரிசியாகவோ பேதுருவோடிருந்த்தாக ஆதி கிறிஸ்தவ எழுத்தாளர்கள் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். இவன் மேலும் ஊழியஞ் செய்து, கடைசியாக எகிப்தில் இரத்தச் சாட்சியாக மரித்தான்.

மாற்குவுடன் சம்பந்தப்பட்ட சில சிறப்பான தகவல்கள் உள்ளன. அப்.12.12ல் குறிப்பிடப்பட்டுள்ள வீட்டிற்கு (மாற்குவின் தகப்பனார் காலத்தில்) இயேசு நமது சீஷர்களுடன் கடைசியாகப் பஸ்காவைப் புசித்தார் என்றும் (மாற்கு 14.14) கெத்செமெனே தோட்டம் அந்த வீட்டுடன் சேர்ந்தது என்றும், 14,13ல் தண்ணீர் குடம் கொண்டு வந்த அந்த மனிதன் மாற்கு என்றும் எண்ணப் படுகிறது. மாற்கு சுவிசேஷத்தில் மட்டுமே ஒரு வாலிபனைப் பற்றிக் குறிப்பிடப் பட்டுள்ளது (14, 51,52).


2.       மாற்கு சுவிசேஷத்தின் விசேஷித்த அம்சங்கள்
மற்ற சுவிசேஷங்களைப் போல் இதில் மத சாஸ்திரம் அல்லது பிற நோக்கங்களுக்குச் சிறப்பான இடமளிக்காமல், முக்கியமாக, இயேசு செய்த அதிசயமான செயல்கள் வரிசைக் கிரமமாக எடுத்துக் கூறப்பட்டிருக்கின்றன. இங்குக் காண்பிக்கப்பட்டிருக்கும் இயேசுவின் வாழ்க்கை, செயல்கள் நிரம்பினதாகவும், அளவற்ற அவருடைய வல்லமை, சோர்வடையாத சக்தி, வற்றாத கிருபையைத் தெரிவிக்கிறதாகவும் இருக்கிறது. சம்பவங்களின் காலமும் இடமும் திட்டவட்டமாகக் கொடுக்கப்பட்டிருக்கிறது. பேதுருவுடன் மாற்குவுக்கு உள்ள தொடர்பின் காரணமாக இவன் எழுதிய வரலாறு சந்தர்ப்ப சூழ்நிலையின் படி விரிவாகக் கூறப்பட்டிருக்கிறது.பேதுருவைக் குறித்து மாற்கு எழுதிய சில விஷயங்கள் மற்ற சுவிசேஷங்களில் எழுதப்படாமலும் (11.21, 13.3) மற்றவர்கள் பேதுருவைப் பற்றி எழுதிய சில குறிப்புகள் மாற்குவினால் எழுதப்படாமலும் இருக்கின்றன. ஒரு வேளை மாற்குவிற்கு அது பேதுருவின் வாழ்க்கை வரலாறு போல் தோன்றியிருக்கலாம். ஆனால் இங்கு தேவையானவர் இயேசு மட்டுமே, மாற்கு அல்லது பேதுரு அல்ல.

3.       மாற்குவின் குடும்பத்தைப் பற்றிய சில அம்சங்கள்
மாற்குவின் குடும்பத்தினர் ஆரம்ப காலத்திலுள்ள சுவிசேஷ ஊழியத்தில் நெருக்கமாக ஈடுபட்டிருந்தனர் (அப்.4.36). இவனுடைய தாயாகிய மரியாள் சமூகத்தில் நல்ல நிலைமையில், ஆஸ்தியுடையவராகவும் ஒரு கிறிஸ்தவளாகவும் இருந்தாள். துன்புறுத்துதல் மிகுதியாக இருந்த சமயத்திலும் கூட இவளுடைய வீடு ஆதித் திருச்சபை கூடுகிற இடமாக உபயோகிக்கப் பட்டது (அப்.12.12). இயேசுவைக் கைதுசெய்த போது ஓடிப்போன வாலிபன் இந்த மாற்குதான் (மாற்கு 14.51).

புத்தகத்தை எழுதுபவர் அவரும் தன்னுடைய பெயரைக் குறிப்பிடுவது வழக்கமல்ல (யோவான் 21.24). மாற்கு 14ல் கூறப்பட்டுள்ள கடைசியான பஸ்கா விருந்து மாற்குவின் வீட்டில்தான் புசிக்கப்பட்டது என்றும் 21.14ல் குறிப்பிடப்பட்டுள்ள வீட்டு எஜமான் மாற்குவின் தகப்பன் என்றும் சொல்லப்படுகிறது. அப்போது அவர் உயிருடன் இருந்தார் என்றும் சொல்லப்படுகிறது. அப்போது அவர் உயிருடன் இருந்தார் என்றும் அப்.12.12ன் தேதிக்கு முன்னதாக இறந்து விட்டதாகவும் தெரிய வருகிறது. சுவிசேஷப் பயணத்திலிருந்து மாற்கு விலகிக் கொண்டபோது (அப்.13.13) பர்னபாவும் பவுலும் தனித்தனியே சென்றனர். மாற்கு தன்னை விட்டு விலகிப் போனதாகப் பவுல் நினைத்தான். எனவே, இரண்டாவது சுவிசேஷப் பயணத்தில் மாற்குவைத் தங்களுடன் அழைத்துச் செல்ல பர்னபா விரும்பிய போது பவுல் இதற்கு மறுத்து விட்டான் (அப்.15.38). எனவே, மாற்குவைத் தன்னுடன் அழைத்துக் கொண்டு பர்னபா சீப்புரு தீவுக்குச் சென்றான். பவுல் சீலாவைக் கூட்டிக் கொண்டு போனான். சில காலத்திற்குப் பின் பவுல் மாற்குவை மன்னித்துத் தனக்கு உதவியாளராக ஏற்றுக் கொண்டான்.

4.       மாற்குவைப் பற்றிய இதர விஷயங்கள்
இவன் இயேசுவின் 12 சீஷர்களில் ஒருவனல்ல. ஆனால் பவுலின் முதலாவது சுவிசேஷப் பயணத்தில் பவுலுடன் சென்றான். மாற்கு தனது சுவிசேஷத்தை ரோமாபுரியிலுள்ள கிறிஸ்தவர்களுக்காக கி.பி.55-65க்கும் இடையே எழுதினான். மாற்கு சவிசேஷமே முதலாவது எழுதப்பட்ட சுவிசேஷம். மத்தேயுவும் லூக்காவும் தாங்கள் எழுதிய சமயத்தில் மாற்கு எழுதிய சுவிசேஷத்தைத் தங்களுக்கு முன் வைத்து, அதிலுள்ளவற்றின் அதிகமான பகுதியைத் தங்கள் சுவிசேஷத்தில் இணைத்து எழுதினார்கள் என்று பொதுவாக ஒப்புக் கொள்ளப்படுகிறது. மாற்கு சுவிசேஷத்தின் 31 வசனங்களைத் தவிர மற்ற எல்லாவற்றையும் மத்தேயு, லூக்கா தங்கள் சுவிசேஷங்களில் எடுத்தெழுதியிருக்கின்றனர். இயேசுவையும், அவருடைய வேலை, போதனைகளையும் மற்றவர் முன் எடுத்துக் காட்டுவதே மாற்குவின் நோக்கம்.

5.       சுவிஷத்தின் முக்கியமான கருத்துகள்
1.     இயேசு கிறிஸ்து – இயேசு கிறிஸ்து ஒருவரே தேவனுடைய குமாரன்.
2.     ஊழியக்காரன் – மாற்கு 10.45 – மேசியாவாக இந்த பூமிக்கு வந்ததின் மூலமாகப் பழைய ஏற்பாட்டுத் தீர்க்கதரிசனங்களை இயேசு நிறைவேற்றினார். ஜெயம் கொள்ளும் அரசனாக அவர் வரவில்லை. அவர் ஓர் ஊழியக்காரனாக வந்தார்.
3.     அற்புதங்கள் – இயேசுவின் பிரசங்கங்களைக் காட்டிலும் அதிகமாக, மாற்கு அற்புதங்களைக் குறிப்பிட்டு எழுதியிருக்கிறான். இயேசு நிச்சயமாகவே வல்லமையும் செயல்களுமுள்ள மனிதர். வெறும் வார்த்தைகளை மட்டும் பேசுபவரல்ல. தாம் யார் என்பதை மக்கள் நம்பும் படியாகவும், தேவனாகத் தம்முடைய உண்மையான அடையாளத்தை சீஷர்கள் அறிந்து கொள்ளும் படிக்கும் இயேசு அற்புதங்களைச் செய்தார்.
4.     சுவிசேஷத்தைப் பரவச் செய்தல் – இயேசு தமது ஊழியத்தை முதலாவது யூதர்கள் மத்தியில் செய்தார். யூதத் தலைவர்கள் அவரை எதிர்த்த போது இயேசு யூதரல்லாதோர் மத்தியில் சென்று பிரசங்கித்து வியாதியஸ்தரைச் சொஸ்தமாக்கினார். அநேகர் இயேசுவில் விசுவாசம் வைத்து அவரைப் பின் பற்றினர். இயேசு சீஷர்களுக்குக் கொடுத்த கடைசியான செய்தி, அவர்கள் உலகத்திற்குள் சென்று இரட்சிப்பின் சுவிசேஷத்தைப் பிரசங்கிக்க வேண்டுமென்று அவர்களுக்குச் சவால் விடுத்தது.


6.       விவாதிக்க வேண்டிய கேள்விகள்
1.     மாற்கு சுவிசேஷத்தை எழுதுவதற்கு யோவான் மாற்குவிற்கு யார் உதவி செய்திருக்கக் கூடும்?
2.     மாற்கு பர்னபாவிற்கு எந்த உறவு முறையில் இனத்தான்?
3.     பவுல் தனது முதலாவது சுவிசேஷப் பயணத்திற்குப் பின் மாற்குவைப் பற்றி முதலில் ஏன் அதிருப்தியாயிருந்தான்?
4.     மாற்குவுக்குச் சாதகமாகப் பவுல் என்ன கூறினான்? (2தீமோ.4.11)
5.     யோவான் மாற்குவின் ஜீவியத்திலிருந்து நாம் என்ன கற்றுக் கொள்ளக் கூடும்?


மொழிபெயர்ப்பு
திருமதி டஃப்னி ஜோசப்
பரி.பவுல் ஆலயம், பெட்டாலிங் ஜெயா

1 comment: