Bishop Datuk Dr. S.Batumalai Ph.D

Bishop Datuk Dr. S.Batumalai Ph.D
பேராயர் டத்தோ டாக்டர் எஸ்.பத்துமலை

மேற்கு மலேசிய ஆங்கிலிக்கன் திருச்சபையின் உதவிப் பேராயர் டாக்டர் எஸ்.பத்துமலை

பேராயர் டாக்டர் எஸ்.பத்துமலை நடத்துகிற நீள்விரி இறையியல் கல்விக்கான பாடப் பொருள்களை நான் மொழி பெயர்த்து வருகிறேன். இப்பாடப் பொருள்கள் உலகமெங்கும் வியாபித்துக் கிடக்கிற தமிழ்க் கிறிஸ்த்வர்கள் பயனுள்ளவையாக அமையவேண்டும் என்பதற்காக இந்த வலைமனையில் இவற்றைப் பதிப்பிக்கிறேன்.

Sunday, December 11, 2011

40. யெப்தா


 – இஸ்ரவேலின் நியாயாதிபதிகளின் ஒருவன்

முக்கிய வசனம்:
யெப்தா அம்மோன் புத்திரரின்மேல் யுத்தம்பண்ண, அவர்களுக்கு விரோதமாய்ப் புறப்பட்டுப்போனான்; கர்த்தர் அவர்களை அவன் கையில் ஒப்புக்கொடுத்தார்.  (நியா.11:32)

சுருக்கமான குறிப்புகள்
·       இஸ்ரவேலின் நியாயாதிபதிகளில் ஒருவன்.
·       இவன் ராணுவ தந்திரங்கள் தெரிந்த வீரனாக இருந்ததினால் இவன் குடும்பத்தார் தங்கள் சத்துருவுடன் போர் புரியும்படி இவனை அமர்த்தினர்.
·       சிம்சோனைப் போல் தேவன் இவனை உபயோகித்தார்.
·       தன் வாக்கை நிறைவேற்றும் மனிதனாக இருந்தான்.
·       தன் சகோதரரை மன்னிக்கக் கூடாதவனாக இருந்தான்.

1.     முகவுரை – இவனுடைய சரித்திரம்
‘யெப்தா’ என்பதற்கு ‘அவர் திறப்பார்’ என்று பொருள் படும். கிலெயாத்துக்கும் ஒரு பரஸ்திரீக்கும் பிறந்த மகன். தன் சகோதரர்களால் வீட்டை விட்டு விரட்டப்பட்டான். (நியா.11:1-2). தாயார் வேசி என்பதால் பாரம்பரிய சொத்தில் இவனுக்குப் பங்கு இல்லை என்று சொல்லி இவனை விரட்டி விட்டார்கள். ஆனால் இவன் பராக்கிரமசாலியாக இருப்பதைக் கண்டு அவன் திரும்பி வந்து அம்மோன் புத்திரரோடு யுத்தம் செய்வதில் உதவி செய்யும்படி கேட்டுக் கொண்டார்கள். தன்னைத் தலைவனாகவும் சேனாதிபதியுமாக வைக்கவும் யுத்தம் செய்வதில் தனக்கு முழு சுதந்திரமும் கொடுக்க வேண்டும் என்ற நிபந்தனையுடன் ஒத்துக் கொண்டான். அவனுடைய கோரிக்கைகள் ஏற்றுக் கொள்ளப்பட்டன. அவன் உடனே சத்துருக்களுக்கு எதிராகச் சென்றான்.

யெப்தா போருக்குப் போகுமுன், தான் வெற்றியோடு திரும்பினால், தன் வீட்டு வாசற்படியிலிருந்து முதலாவது எதிர்கொண்டு வருவதைக் கர்த்தருக்குப் பொருத்தனை பண்ணினான் (நியா.11:30,31). அவன் அம்மோன் புத்திரரை வென்றான். வீட்டுக்குத் திரும்பும் போது, அவனுடைய ஒரே மகள் அவனுக்கு எதிர்கொண்டு வந்தாள். இரண்டு மாதங்களுக்குப் பின் அவன் செய்த பொருத்தனையின் படியே அவளுக்குச் செய்தான்.

தங்களுடைய சம்மதமின்றி அவன் எப்படி அம்மோனியருடன் யுத்தம் செய்யலாம் என்று கேட்டதற்காக எப்பிராயீமின் பெருமையான மனிதரைத் தண்டிப்பதே யெப்தாவின் அடுத்த செயல். அவர்கள் ஆயுதங்களை எடுத்து பெய்தாவுடன் போர் செய்ய வந்தபோது, கீலேயாத்தின் மனிதர் அவர்களைத் தோற்கடித்து விட்டனர். ஓடிப்போன எப்பிராயீமின் மக்களை யோர்தான் துறையில் வெட்டிப் போட்டார்கள் (நியா.12:1-6)

அவனுடைய திறமையும் ஞானமும் இஸ்ரவேலுக்கு 6 ஆண்டுகள் சேவை செய்தன. இவன் இஸ்ரவேலை 6 ஆண்டுகள் நியாயம் விசாரித்தான். பின்பு அவன் மரித்து, கீலேயாத்திலுள்ள ஒரு பட்டணத்தில் அடக்கம் பண்ணப்பட்டான் (நியா.12:7). எபிரெயர் 11:32ல் விசுவாச வீர்ர்களின் பட்டியலில் இவன் குறிப்பிடப்பட்டிருந்த போதிலும், சிம்சோனைப் போல் யெப்தா தேவனுடைய வல்லமையின் கருவியாக இருந்தானே தவிர அவருடைய கிருபையை வெளிக்காட்டும் உதாரணமாக இல்லை. அவனுடைய திறமை,சேவையைப் புரிந்து கொள்ளுதல்:-
1.1.பிரச்சனைகளுக்குத் தீர்வு காண அவன் செயல்படும் முறையாக முதலாவது  முயற்சி பேசுவது. அம்மோனியருடன் செய்த போரில் அவன் முதலாவது பேச்சு வார்த்தைகள் நடத்தினான். பிரச்சனைகளைத் தெளிவுபடுத்தி அதன் காரணத்தை யாவரும் அறியச் செய்தான். அவன் ஒரு புத்திசாலி. யுத்த தந்திரம் அறிந்தவன். சண்டை போடுவதற்கு முன் பேச்சு வார்த்தை நடத்தினான்.
1.2.ஏதோ அவசரத்தில் பேசப்பட்ட வாத்தையாக இருந்த போதிலும் அல்லது அது வேதனையைக் கொடுப்பதாக இருந்தாலும் கூட அவன் தான் கொடுத்த வாக்கைக் காப்பாற்றுகிற மனிதனாக இருந்தான். இந்தப் பகுதியின் ஒரு முக்கியமான கேள்வி என்ன வென்றால், அவர்கள் எவ்வளவாக எப்படி தேவன் பேரில் சார்ந்திருந்தார்கள் என்பதே. நீ சொன்ன வார்த்தையின் நிமித்தம் அதற்காக என்ன விலை கொடுக்க வேண்டியதாக இருந்தாலும், அதற்காக பொறுப்பை நீ ஏற்றுக் கொள்ளும் போது, நீ எவ்வளவாக நம்பிக்கைக்குப் பாத்திரவானாக இருக்கிறாய் என்பதைக் காண்பிக்கிறது.
1.3.விசுவாச வீரர்களின் பட்டியலில் இவன் குறிப்பிடப் பட்டிருக்கிறான்.
1.4.தேவனுடைய ஆவியினால் இவன் கட்டுப்படுத்தப் பட்டான்.
1.5.தன் சகோதரரை மன்னிக்கக் கூடாதவனாக இருந்தான். மாற்றாந் தாயின் மக்கள் தன்னை நடத்திய விதத்தினால் இவனுக்குள் மனக் கசப்பு இருந்தது.
1.6.இவன் ஒரு அவசரமானவனும் முட்டாள் தனமானவனுமாக ஒரு பொருத்தனை செய்தான் என்பதை இவனுடைய வாழ்க்கை நமக்குப் போதிக்கிறது. இதைக் குறித்து எழுதியவர், யெப்தாவின் கொடிய துக்கத்தையும் தன் தகப்பனுடைய விசுவாசத்தை மதித்து, தன்னையே ஒப்புக் கொடுத்த மகளின் மன தைரியத்தையும் எடுத்துக் காண்பிக்கிறார்.
1.7.நீ விரும்பினால் தேவன் உன் எதிர்காலத்தை மாற்றுவார். ஒரு மனிதனின் கடந்த காலம் அல்லது பின்னணியும், தேவன் அவன், அவள் வாழ்க்கையில் வல்லமையுடன் கிரியை செய்வதைத் தடுக்க முடியாது.
1.8.வழி இல்லாத இடத்தில் தேவன் வழியை உண்டு பண்ணுவார். யெப்தாவின் சிறப்பும், அவனுக்குக் கிடைத்த வெற்றிகளும்,  சவுலின் ஆட்சிக்காலம் வரை பல ஆண்டுகளுக்கு அம்மோனியரின் படையெடுப்பை நிறுத்தி வைத்தது. அவனுடைய துணிச்சலான செயல்களும் வெற்றிகளும் தேவனுடைய தயவுக்கு சான்றுகள் என்பது தெரிய வருகிறது. தன்னுடைய மனதுயரத்தையும் பொருட்படுத்தாது, தன் மகளைப் பலி செலுத்தி, அவன் ஞாபகமாக ஒரு புதிய வழக்கத்தை இஸ்ரவேலில் ஸ்தாபித்தலும் அவனது தளராக மனதை வெளிக்காட்டுகிறது.

3.   முடிவுரை
a.   ஒவ்வொருவரைப் பற்றியும் தேவன் ஒரு நோக்கம் வைத்திருக்கிறார். நாம் விசுவாசத்துடன் நமது வாழ்க்கையை அவருக்கு ஒப்புக் கொடுக்க வேண்டும்.

4.   வேத வசன ஆதாரங்கள்
a.   நியாயாதிபதிகள் 11:1-12:7ல் இவனுடைய சரித்திரம் கூறப்பட்டுள்ள. 1 சாமுவேல் 12:11உம் எபிரேயர் 11:32உம் இவன் குறிப்பிடப்பட்டிருக்கிறான்.

5.   விவாதத்துக்கான கேள்விகள்
a.   இவன் யார்?
b.   அவன் பிறருக்காக என்னென்ன செய்தான்?
c.   அவனுடைய யுத்த தந்திரம் என்ன?
d.   அவன் தனது வாக்கைக் காப்பாற்றுபவன் என்று நாம் ஏன் சொல்லுகிறோம்?
e.   அவனால் ஏன் தன் சகோதரனை மன்னிக்க முடியவில்லை?

மொழிபெயர்ப்பு:
திருமதி டஃப்னி ஜோசப்,
பரி.பவுல் ஆலயம், பெட்டாலிங் ஜெயா

No comments:

Post a Comment