Bishop Datuk Dr. S.Batumalai Ph.D

Bishop Datuk Dr. S.Batumalai Ph.D
பேராயர் டத்தோ டாக்டர் எஸ்.பத்துமலை

மேற்கு மலேசிய ஆங்கிலிக்கன் திருச்சபையின் உதவிப் பேராயர் டாக்டர் எஸ்.பத்துமலை

பேராயர் டாக்டர் எஸ்.பத்துமலை நடத்துகிற நீள்விரி இறையியல் கல்விக்கான பாடப் பொருள்களை நான் மொழி பெயர்த்து வருகிறேன். இப்பாடப் பொருள்கள் உலகமெங்கும் வியாபித்துக் கிடக்கிற தமிழ்க் கிறிஸ்த்வர்கள் பயனுள்ளவையாக அமையவேண்டும் என்பதற்காக இந்த வலைமனையில் இவற்றைப் பதிப்பிக்கிறேன்.

Thursday, December 29, 2011

54. கோராகு


 ஆசாரியனாகிய லேவியின் பேரன்.


முக்கிய வசனம்:
    "பின்னும் மோசே கோராகை நோக்கி: லேவியின் புத்திரரே, கேளுங்கள்; கர்த்தருடைய வாசஸ்தலத்தின் பணிவிடைகளைச் செய்யவும், சபையாரின் முன் நின்று அவர்கள் செய்யவேண்டிய வேலைகளைச் செய்யவும், உங்களைத் தம்மண்டையிலே சேரப்பண்ணும்படி இஸ்ரவேலின் தேவன் இஸ்ரவேல் சபையாரிலிருந்து உங்களைப் பிரித்தெடுத்ததும், அவர் உன்னையும் உன்னோடேகூட லேவியின் புத்திரராகிய உன்னுடைய எல்லாச் சகோதரரையும் சேரப்பண்ணினதும், உங்களுக்கு அற்பகாரியமோ? இப்பொழுது ஆசாரியப்பட்டத்தையும் தேடுகிறீர்களோ?" (எண்ணாகமம் 16:8–10).


சுருக்கமான கதை:
.  ஒரு லேவியன் தன்னாலேயே ஆசாரியன் இல்லை.
.  பொறாமையால் தூண்டப்பட்டு மோசேக்கு எதிராக ஒரு கட்சியைத் துவக்கினான்.
.  அவனுடைய குறையுள்ள தீர்மானிக்கும் திறமையால் தன் வேலையையும், சேவை செய்யும் நிலைமையையும், தன் உயிரையும் இழந்தான்.
.  அவன் பேராசையே அவனுடைய அழிவுக்குக் காரணம் ஆயிற்று.


1.  முன்னுரை: கோராகின் கதை.
    கோராகு என்ற பெயருக்கு வழுக்கை என்று பொருள்.  யாத்திரையின் காலத்தில் கோராகு ஒரு புகழ் பெற்ற, மிகுந்த செல்வாக்கு பெற்ற தலைவனாய் இருந்தான். இஸ்ரவேலின் முக்கியமான மனிதர்களுள் ஒருவனாக அவன் குறிப்பிடப்பட்டுள்ளான் (யாத்திராகமம் 6).  ஆண்டவருடைய ஆசரிப்புக் கூடாரத்தில் சிறப்பான சேவை செய்ய நியமிக்கப்பட்ட  முதல் லேவியரில் கோராகும் ஒருவன்.

   கோராகு லேவியின் குமாரரில் ஒருவன்.  ஆனால், அவன் தன் உறவினராகிய மோசே, ஆரோன் ஆகியோரின் அதிகாரத்தைக் கண்டு பொறாமைப்பட்டு, அவர்களுக்கு எதிராக ஒரு கட்சியைத் துவக்கினான். தாத்தான், அபிராம் ஆகியோரையும், லேவியரில் முக்கியமான 250 பேரையும் தன்னுடன் சேர்த்துக்கொண்டான் ( எண்ணாகமம் 16). அவனும், அவனைப் பின் பற்றியவர்களும் ஒரு பூக‌ம்பத்தில் சிக்கி, தீயிலே அழிந்து போனார்கள்.
   
    ஒரு லேவியனாக கோராகு ஆசரிப்பு கூடாரத்தின் தினசரி வேலைகளில் உதவி செய்தான். ஆண்டவருக்கெதிராக இஸ்ரவேல் மேற்கொண்ட பெரிய கிளர்ச்சிக்குப் பிறகு (எண்ணாகமம் 13:14), கோராகு தன்னுடைய சிறிய கிளர்ச்சியைத் தொடங்கினான். குறைகளைக் கேட்கும் ஒரு செயற்குழுவை ஆரம்பித்து மோசேயையும் ஆரோனையும் எதிர்கொண்டான். அவர்களுடைய குறைகளின் பட்டியலை இந்த மூன்று வாக்கியங்களில் அடக்கலாம்:


1.  நீ மற்ற யாரையும் விடச் சிறந்தவன் இல்லை.
2.  இஸ்ரவேலில் உள்ள ஒவ்வொருவரும் ஆண்டவரால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்.
3.  நாங்கள் உமக்குக் கீழ்ப்படியத் தேவையில்லை.

கோராகு முதல் இரண்டு வாக்கியங்களையும், தவறான முடிவை எடுப்பதற்காக தனக்குத் தேவையானபடி மாற்றிக்கொண்டான்.

   அனைத்து இஸ்ரவேலரும் வழி நடத்துவதற்காகத் தேர்ந்தெடுக்கப்படவில்லை. கோராகின் மறைவான கோரிக்கை: "  வழி நடத்திச் செல்வதற்கு மோசேக்கு இருந்த எல்லா உரிமையும் எனக்கும் உண்டு" என்பதுதான்.அவனுடைய இந்தத் தவறு அவனுடைய வேலையையும், சேவை செய்யும் நிலைமையையும் மட்டுமல்லாமல், அவனுடைய உயிரையும் இழக்கச் செய்தது.

   ஆண்டவருடைய வார்த்தையின் ஒரு பாகத்தை மட்டும் நம்முடைய தேவைக்கு ஆதரவாகப் பயன் படுத்தக் கூடாது என்று நாம் எச்சரிக்கபட்டிருக்கிறோம். நம்முடைய ஆசைகளை  உருவகப்படுத்த அவர் வார்த்தையை முழுமையாக அனுமதிக்க வேண்டும். பதவியிலும், அதிகாரத்திலும் நாம் திருப்தி அடையக்கூடாது. நம்முடைய பதவியின் மூலமாக நம்மைப் பயன்படுத்த ஆண்டவர் விரும்பக் கூடும்.


2.  கோராகின் வாழ்க்கையிலிருந்து பாடங்களை நாம் எவ்வாறு புரிந்து கொள்ளலாம்?

    ஆண்டவர் தன்னை வைத்திருக்கும் அந்த முக்கியத்துவமுள்ள பதவியைப் புரிந்து கொள்ள கோராகு தவறி விட்டான். அவனுடைய போராட்டம் மோசேக்கு எதிராக அல்ல அவனைவிட மிகப் பெரியவரான ஒருவருக்கு ( ஆண்டவர்) என்பதை மறந்து விட்டான். அவனுடைய பேராசை அவன் பகுத்தறிவைக் குருடாக்க அனுமதித்தான்.

3.  முடிவுரை:

   சில நேரங்களில் குறிக்கோளுக்கும் பேராசைக்கும் இடையே ஒரு மிக மெல்லிய கோடே உள்ளது. நம்மிடம் இருப்பதைக் குறித்து நாம் திருப்தி இல்லாதவர்களாக இருந்தால், இருப்பதையும் நாம் இழக்க நேரிடும்.

4.  வேத ஆதாரங்கள்:
கோராகின் கதை எண்ணாகமம் 16:1–40 வசனங்களில் சொல்லப்பட்டிருக்கிறது. எண்ணாகமம் 26:9; யூதா 11 லும் சொல்லப்பட்டிருக்கிறது. அவனுடைய சந்ததியார் பாடகர்களின் சங்கம் ஒன்றை ஆரம்பித்து இருக்கக்கூடும். ஏனெனில், சில சங்கீதங்களின் தலைப்புகளில் அவர்களைப்பற்றி சொல்லப்பட்டிருக்கிறது. (எ.கா. சங்கீதம் 87, 88).

 5.  விவாதத்துக்குரிய கேள்விகள்:
5.1  கோராகு யார்?
5.2  அவன் எவ்வளவு நல்லவன்?
5.3  மோசேக்கு எதிரான அவனுடைய குற்றச்சாட்டுகள் என்ன?
5.4  அவனுடைய வீழ்ச்சிக்குக் காரணம் என்ன?
5.5  அவனுடைய வாழ்க்கையில் இருந்து நாம் கற்கும் பாடம் என்ன?
5.6  உங்கள் ஆலயத்தில் ஒற்றுமையின்மைக்குக் காரணங்கள் என்ன?


மொழி பெயர்ப்பு:
திருமதி. கிரேஸ் ஜட்சன்,
பரி. பவுல் ஆலயம், பெட்டாலிங் ஜெயா.

No comments:

Post a Comment