50. யோசேப்பு– யாக்கோபின் குமாரன் ( எகிப்தின் ராஜாக்களில் ஒருவர்)
முக்கிய வசனம்:
"அப்பொழுது பார்வோன் தன் ஊழியக்காரரை நோக்கி: தேவ ஆவியைப்பெற்ற இந்த மனுஷனைப்போல வேறொருவன் உண்டோ என்றான்". (ஆதியாகமம் 41:38)
சுருக்கமான கதை:
. யோசேப்பு தன் ச்கோதரர்களால் எகிப்துக்கு விற்கப்பட்டான்.
. பொய்யாய் குற்றம்சாட்டப்பட்டு சிறையில் போடப்பட்டான்.
. தன்னுடைய புதிய வேலையின் மூலம் அவன் எகிப்தையும், மற்ற தேசங்களையும் காப்பாற்றினான்.
. தன் பெற்றோரையும், சகோதரருடைய குடும்பங்களையும் செழிப்பான எகிப்துக்கு கொண்டு வந்தான்.
1. முன்னுரை: யோசேப்பின் கதை.
யோசேப்பு என்ற பெயருக்கு "ஆண்டவர் இன்னும் குமாரரைத் தருவார்" என்று பொருள். (ஆதியாகமம் 30:24).
பின் கதை:
யோசேப்பு யாக்கோபின் பதினொன்றாவது குமாரன். ராகேலின் மூலம் அவன் பெற்ற, அவனுக்கு மிகவும் பிடித்தமான முதல் மகன். (ஆதியாகமம் 37:3). யோசேப்பின் கதை தான் பழைய ஏற்பாட்டிலேயே மிகவும் விவரமாக சொல்லப்பட்ட, எல்லாரையும் கவர்ந்த கதையாகும்: பொறாமை கொண்ட தன் சகோதரர்களால், எகிப்தியருக்கு அடிமையாக விற்கப்பட்ட ஒரு சிறுவன், தன் துன்பத்தையே தனக்கு சாதகமாக மாற்றிக்கொண்டு, நியாயமில்லாத சிறைத்தண்டனையிலிருந்து நாட்டின் மிக உயர்ந்த பதவிக்கு உயர்ந்தவன். தன்னுடைய ஞானமான திட்டமிடுதலால் பஞ்சத்தின் கோரத்தைத் தவிர்த்து, எகிப்தையும், கானான் தேசத்தையும், தன் சொந்த குடும்பத்தையும் பட்டினியிலிருந்து காப்பாற்றினான். அவனுடைய சகோதரர்களுடன் ஒப்புரவாகி அதன்பின் அவன் குடும்பத்தை எகிப்தின் வடகிழக்கு பகுதியிலே மிகவும் செழிப்பான ஒரு தேசத்திலே குடியேற்றினான். யாக்கோபு மரித்தபின் அவனை அவன் விருப்பப்படி கானான் தேசத்திலே அடக்கம்பண்ணினான். இஸ்ரவேலரை தேவன் வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட தேசத்துக்கு கடைசியில் அனுப்பும்போது, தன் எலும்புகளையும் எகிப்திலிருந்து கொண்டுபோக வேண்டும் என்று இஸ்ரவேல் புத்திரரிடத்தில் ஆணையிடுவித்துக்கொண்டான்.
தேதி:
யோசேப்பு வாழ்ந்த காலம் ஹிக்ஸாஸ் பார்வோன்கள் வாழ்ந்த கி.மு.1720–1570. முதலில் இந்த செமிடிக் இன ராஜாக்கள் ஏற்கெனவே இருந்த எகிப்திய அதிகாரவர்க்கத்தின் நிர்வாகத்தை மேற்கொண்டனர். ஆனால் அதன் பின் செமிடிக் இன மக்கள் உயர்ந்த பதவிகளில் நியமிக்கப்பட்டார்கள்.
"பலவர்ண மேல் அங்கி" :
யாக்கோபுக்கு யோசேப்பின்மேல் இருந்த பரபட்சமான அன்பின் வெளிப்பாடே இந்த "பல வர்ண மேல் அங்கி". இதுவே யோசேப்பின் சகோதரர்களிடையே பொறாமையைத் தூண்டியது. இந்த நிலையைத் தாங முடியாத அவனுடைய பத்து மூத்த சகோதரர்களையும், அவனுக்கு எதிராக சூழ்ச்சி செய்ய வைத்தது. இந்த பொறாமைக்கு யோசேப்பும் ஒருவகையில் காரணம். ஆனால் இந்த தன்னம்பிக்கை யோசேப்பை முழுமையாக்கி, பிறர் தோற்றுப்போயிருக்கும் விஷயத்தில் அவனை வெற்றி பெறச் செய்தது. அவன் தன் தன்னம்பிக்கையோடு முதலில் அமைதியான் ஞானத்தையும், பின் ராஜாவையும், பல வருடங்களுக்குப்பின் தன் பத்து சகோதரர்களையும் சேர்த்துக்கொண்டான்.
யோசசேப்பு எகிப்துக்கு விற்கப்பட்டான்:
யோசேப்பு ஆடு மேய்த்துக்கொண்டிருந்த தன் சகோதரர்களைப் பார்க்கச் சென்றபோது, அவர்கள் முதலில் அவனைக் கொல்லத் திட்டமிட்டார்கள். ஆனால் அவனைக் காப்பாற்ற எண்ணிய ரூபனின் யோசனைப்படி, அவனைக் கொல்லாமல் ஒரு பள்ளத்தில் போட்டார்கள். சகோதரர்கள் உணவு அருந்திக்கொண்டிருந்த போது, இஸ்மவேல் ( அல்லது மீதியானியர்) வணிகர்களின் வண்டிகள் கிலேயாத்திலிருந்து வருவதை தூரத்தில் கண்டார்கள். அவர்களிடம் யோசேப்பை விற்று சீக்கிரமாக அவனைத் தொலைத்துக்கட்ட முடிவு செய்தார்கள். வண்டிகள் அருகில் வந்ததும், முதலில் வந்த வணிகரிடம் யோசேப்பை விற்றார்கள் (ஆதியாகமம் 37:28). வண்டிகள் தாண்டிச் சென்றதும், பள்ளத்தைச் சென்று பார்த்த ரூபன் யோசேப்பைக் காணாமல் பதறினான். இதிலிருந்து, வண்டிகள் வந்ததிலிருந்து அவர்களைத் தண்டிச்
சென்றதுவரை ரூபன் அந்த இடத்தில் இல்லை என்பது தெரிகிறது
யார் யோசேப்பை எகிப்தியரிடம் விற்றது?
எகிப்திலே மீதியானியர் அல்லது இஸ்மவேலர் யோசேப்பை பார்வோனின் பிரதானியாகிய போதிபாரிடம் விற்றார்கள் (ஆதியாகமம் 37:36; 39:1). பின்னர் யோசேப்பு தன்னை வணிகர்களிடம் விற்றதற்காகத் தன் சகோதரர்களைக் கோபித்துக்கொண்டான்.
எகிப்திலே யோசேப்பு:
எகிப்திலே யோசேப்பின் முன்னேற்றத்துக்கான ஒவ்வொரு படியிலும் ஆண்டவர் அவனோடு இருந்தார். போதிபாருடைய தகாத விருப்புடைய மனைவி நடந்த உண்மையை மாற்றிக்கூறி யோசேப்பின் மீது பழியைப் போட்டாள். இரண்டு வருடங்கள் சிறையில் அடைக்கப்பட்டபின் பார்வோனுடைய கனவின் உட்கருத்தைச் சொல்வதற்காக பார்வோனின் முன் நிறுத்தப்பட்டான், வழக்கில் விசாரிக்கப்படுவதற்காக அல்ல. அவனுடைய தளராத உழைப்பும், நம்பிக்கை மிக்க மனப்பாங்கும் சீக்கிரத்திலேயே கவனிக்கப்பட்டு, அவன் சிறை நிர்வாகியாக பதவி உயர்வு பெற்றான். ஆண்டவர் யோசேப்பின் நிலைமையையே மாற்றினார். யோசேப்பின் வாழ்வில் மாற்றத்தைக் கொண்டுவர ஆண்டவர் பார்வோனின் சமையல்காரனை பயன்படுத்தினார் (ஆதியாகமம் 40:1–3).
கனவுகளின் உட்கருத்தை விளக்கும் ஞானத்தை யோசேப்புக்குக் கொடுத்து ஆண்டவர் அவனை ஆசீர்வதித்தார்( ஆதியாகமம் 41:14). இதற்கு யோசேப்பு ஆண்டவருக்கே மகிமையை செலுத்தினான் (ஆதியாகமம் 41:16). எகிப்திற்கான ஆண்டவரின் திட்டத்தை மொழிபெயர்த்து அதை நடைமுறை செயலாக்கமாக ஆக்கியதன் மூலமாக யோசேப்பு எகிப்து தேசத்தைக் காப்பாற்றினான். ஆண்டவரின் பரிசுத்த ஆவியால் நிரப்பப்பட்ட மனிதன் யோசேப்பு என்பதை பார்வோன் அறிந்தான்.
சிறைச்சலையின் சுவற்றிற்க்குள் இருந்து பார்வோனின் அரண்மனைக்கு யோசேப்பு மிகவும் சீக்கிரத்தில் உயர்ந்தான். இந்த முக்கியமான பதவிக்குத் தேவையான பயிற்சி அவன் முதலில் ஒரு அடிமையாகவும் அதன் பின் ஒரு கைதியாகவும் இருந்ததில் கிடைத்தது. யோசேப்பு எகிப்தின் கவர்னராக ஆனபோது அவன் 30 வயதுடையவனாக இருந்தான். அவனுடைய சகோதரர்களால் அடிமையாக விற்கப்பட்டபோது 17 வயதுடையவனாக இருந்தான். இதிலிருந்து அவன் 11 வருடங்கள் எகிப்திய அடிமையாகவும், 2 வருடங்கள் சிறையிலும் இருந்திருப்பான் என்று தெரிகிறது.
பஞ்சம் முதலில் அவன் சகோதரர்களையும், பின்னர் அவன் தந்தையையும் எகிப்துக்குக் கொண்டு வந்தது. யோசேப்பு தன் சகோதரர் தன்னை வணங்குவதாகக் கண்ட கனவை நினைவு கூர்ந்தான் (ஆதியாகமம் 37:6–9). அவனுக்கும், அவன் சகோதரர்களுக்கும், அவன் தந்தைக்கும் ஒரு புது வாழ்க்கை எகிப்தில் தொடங்கியது. யோசேப்பு தன் சகோதரர்களை மன்னித்தான். அவர்கள் உயிரையும், எகிப்தையும் காக்கவும், இஸ்ரவேல் தேசத்தின் தொடக்கத்திற்குரிய பாதையை தயார் படுத்தவும் ஆண்டவர் யோசேப்பை முதலில் எகிப்துக்கு அனுப்பினார். யோசேப்பு தன் சகோதரர்களைப் பார்த்து," நீங்கள் எனக்குத் தீமை செய்ய நினைத்தீர்கள்; தேவனோ இப்பொழுது நடந்து வருகிறபடியே, வெகு ஜனங்களை உயிரோடே காக்கும்படிக்கு அதை நன்மையாக முடியப்பண்ணினார்", என்றான் (ஆதியாகமம் 50:20). யோசேப்பு ஒதுக்கப்பட்டான், கடத்தப்பட்டான், அடிமையாக்கப்பட்டான், சிறைப்பிடிக்கப்பட்டான். யோசேப்பு அவர்களை மன்னித்தது மட்டுமல்லாமல், தன் செல்வத்தையும் அவர்களோடு பகிர்ந்து கொண்டான். யோசேபின் விசுவாசம் அவன் குடும்பம் முழுவதையும் பாதித்தது. யோசேப்பு கனிகொடுக்கிறவனாக இருந்தான். அவன் சந்ததியாரில் சிலர் மிகுந்த வீரமும், தைரியமும் உடையவர்களாக இருந்தார்கள். அவர்களில் ஒருவன் யோசுவா, இஸ்ரவேலரை ஆண்டவர் சுதந்திரமாகக் கொடுத்த தேசத்துக்கு அழைத்துச் செல்லுபவன் (யோசுவா 1:10–11). எகிப்தில் யாக்கோபு மரித்த போது யோசேப்பு அங்கே இருந்தான். பார்வோனின் நம்பிக்கைக்குரிய ஆலோசகனாக இருந்தான். யோசேப்பு எகிப்திலே மரித்தான்; ஆண்டவர் வாக்குத்தத்தம் பண்ணினபடியே தன் மக்களைக் காப்பார் என்று விசுவாசித்தான்.
2. யோசேப்பின் பலங்களும், சாதனைகளும்:
அ) அடிமைவாழ்விலிருந்து எகிப்தின் அதிபதியாக உயர்ந்தான்.
ஆ) தன்னுடைய நேர்மைக்கும் நாணயத்திற்கும் எல்லாராலும் அறியப்பட்டான்.
இ) ஆவிக்குரிய கூர் உணர்வு உடையவனாக இருந்தான்.
ஈ) பஞ்சத்திற்குத் தப்பிப் பிழைக்க எகிப்து தேசத்தை தயார் படுத்தினான்.
உ) மிகவும் உயர்ந்த பதவியும், வெற்றிகளும் இருந்தாலும், அவன் எகிப்தைத் தன் சொந்த தேசமாகக் கருதவில்லை.
ஊ) யோசேப்பு நமக்கு மிகவும் பலமுள்ள மரபுரிமைச் செல்வத்தை விட்டுச் சென்றிருக்கிறான். ஆண்டவருடைய விசுவாசத்தில் அசைக்க முடியாத நம்பிக்கையை விட்டுச் சென்றிருக்கிறான்.
3. பலவீனங்களும், தவறுகளும்:
அவனுடைய இளவயதுக்குரிய பெருமை அவனுடைய சகோதரரிடையே சச்சரவையும் கருத்து வேறுபாட்டையும் உண்டாக்கியது.
4. அவனுடைய வாழ்க்கையிலிருந்து பாடங்கள்:
வாழ்க்கையில் எது முக்கியம் என்றால், நடக்கும் நிகழ்ச்சிகளோ, சூழ்நிலைகளோ அல்ல, அந்த நிகழ்ச்சிகளுக்கு நாம் என்ன பதில் கொடுக்கிறோம் என்பதுதான். ஆண்டவருடைய உதவியால், மற்றவரால் நமக்கு தீங்கு உண்டாகச் செய்யப்படும் காரியங்கள் கூட நமக்கு நன்மையாக மாற்றிக்கொள்ள முடியும்.
5. வேத ஆதாரங்கள்:
யோசேபின் கதை ஆதியாகமம் 30–50 ஆம் அதிகாரங்களில் சொல்லப்பட்டிருக்கிறது. எபிரேயர் 11:22 லும் சொல்லப்பட்டிருகிறது.
6. விவாதத்துக்குரிய கேள்விகள்:
6.1 யோசேப்பு யாருடைய குமாரன்?
6.2 எகிப்தியருக்கும், தன் குடும்பத்துக்கும் அவன் எவ்வாறு உதவினான்?
6.3 அவன் ஏன் சிறையில் போடப்பட்டான்?
6.4 அவன் எப்படி வாழ்வு வளம் பெற்றான்?
6.5 அவனை ஆண்டவர் ஏன் ஒரு உயர்ந்த பதவிக்கு உயர்த்தினார்?
6.6 ஒரு கிறிஸ்தவன் , கிறிஸ்தவர் அல்லாத சமுதாயத்தில் எப்படி பிரயோஜனமான மனிதனாக இருக்க முடியும்?
மொழி பெயர்ப்பு:
திருமதி. கிரேஸ் ஜட்சன்,
பரி.பவுல் ஆலயம், பெட்டாலிங் ஜெயா.
No comments:
Post a Comment